செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் - 2

வணக்கம்,

நண்பர்கள் சிலர் புதிதாக சில இணைப்புகள் கொடுத்ததினால் அதை ஏற்கனவே பதிவிட்டிருந்த இடுகையில் இணைத்தேன்.

ஆனால், இதனை தொடரும் நண்பர்களுக்கு புதிய இணைப்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என எண்னியதால் அந்த புதிய இணைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)
Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english
http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm

Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications
இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

(Deadline March 27)

AtoSiM Master of Science
http://www.erasmusmundus-atosim.cecam.org/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm
http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

பொதுவாக தேட மற்றும் ஒரு தளம் http://www.scholarshipnet.info/

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

இவை அனைத்தும் ஏற்கனவே, பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள்
என்னும் தலைப்பில் இடப்பட்டிருந்த இடுகையில் பகுதிவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழனின் உணர்ச்சிவசப்படலும்....

புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் - செய்தி

இது போன்ற தாக்குதல்களினால் வரும் உற்சாகத்தில் அங்கு அவலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலமையை மறந்துவிடக் கூடாது.. அதனால் தான் புலிகளே கடந்த 2 மாத காலமாக தங்களது கள நிலைமையை அடக்கி வாசித்தனர்....


இந்த 2009ம் ஆண்டு துவக்கத்திலிருந்து மட்டும் சிங்களம் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை எத்தனை?? அதற்காக துவக்கப்பட்ட இழைகள் எத்தனை? இங்கு பாருங்கள் அரை மணி நேரத்தில் எத்தனை இடுகைகள்??????? !!!!தமிழா..... உணர்ச்சிவசப்பட உன்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை !!!!

திங்கள், 16 பிப்ரவரி, 2009

இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி நிகழ்வுகள்

நண்பர்களே,

வரும் நாட்களில் இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி/கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பேரணி

நாள்:
வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்: காலை 10.30 முதல் மாலை 4 வரை.

மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை காண்க.


நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க், குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாக இங்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் http://www.pearlaction.org/ மற்றும்https://www.tamilsagainstgenocide.org/ என்னும் தளத்திற்கு செல்வதன் மூலம், நீங்கள் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் இனப்படுகொலைக்கான உதவியினை கண்டித்தும் அதை நிறுத்த வேண்டியும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: (18-02-09) புதன் கிழமை
நேரம்: காலை 10 லிருந்து மதியம் 2 வரை.

இடம்: High Commission of India

India House
Aldwych

London

http://hcilondon.in/contactus.php


ஜெர்மனியில்
கவனயீர்ப்பு நிகழ்வு

ஜெர்மனியின்
Dusseldorf நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துணைத்தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 24- 02-09
நேரம்: பிற்பகல் 12.30 மணி


சுவீஸில் உள்ள ஐ நா சபை அலுவலகத்தின் முன் பேரணி

நாள்: வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்:
நிகழ்வு ஆரம்பம் மதியம் 1 மணியிலிருந்து
இன அழிப்பை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளை விரைவாக செயற்படவைக்கவும், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்கள் தவறாமல் கலந்து கொள்வீர்.. குடும்பத்தார், நண்பர், உடன் பணிபுரிவோருக்கு இந்த நிகழ்வுகள் பற்றி தெரியப்படுத்துங்கள்.

மறவாமல் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2009

முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - விகடன்

ஆனந்த விகடன், தனது 18-02-09 வெளியீட்டில் கீழ்கண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னமே, சில பதிவர்கள் தங்களுடைய வலைத்தளத்தில் இதை வெளியிட்டிருப்பினும், இக்கடிதத்தின் நோக்கம்/முக்கியத்துவம் கருதி அது இங்கும் வெளியிடப்படுகிறது.
************************************************************************************
முத்துக்குமார்... ..கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா!

தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம்.

உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன். ஏனெனில், இங்கே அது மட்டுமே உண்மை!

நீ பேசாமல்கிடந்த அந்த மூன்று நாட்கள், இதுவரை பேசிப் பேசி எம்மை ஏமாற்றிப் பிழைத்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தினங்கள். 'காதலர் தினத்தில்' காதலிக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடிய வயதுதான் உனக்கும். ஆனால், நீ எழுதிய கடைசிக் கடிதம், பிரிவின் பெருவலியில் துடிக்கும் பிரபஞ்சக் காதலின் குரல். பார்க்கச் சகியாத அவலத்தை அடித்து நொறுக்கும் அன்பின் விரல். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தாய்.'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்ற குரலின் நீட்சியாய், 'உலகத் தமிழ் இளைஞர்களே ஒன்றுபடுங்கள்' என அறைகூவிவிட்டுச் செத்துப்போன நண்பனே... தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, சுகம், சுயநலம், வக்கிரம், கூத்து என ஒரு தலைமுறை உருவாகிறதோ என்ற சந்தேகத்துக்கெல்லாம் சாட்டையடியானது, உன் கடிதத்துக்குப் பிறகான நிகழ்வுகள்.

இளைஞர்களும் மாணவர்களும்தான் உன் மரணத்துக்கு மரியாதை தரத் திரண்டார்கள். இனப் படுகொலைக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். எங்கெங்கோ பெயர் தெரியாமல் உண்ணாவிரதம் இருந்து சுருண்டார்கள். கல்லூரி வளாகங்களில், பேருந்து-ரயில் நிலையங்களில், தெருக்களில், சந்திப்புகளில் நீ சொன்ன செய்திகளையும், இன அழிப்பின் பயங்கரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒட்டுமொத்தமாக அவர்கள் உன் முன் வைக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா?

'எங்களை வழிநடத்த யார் இருக்கிறார்கள்? நடக்கும் அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் எங்கள் குரல்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கும் உண்மையான தலைவன் எங்கே?' இங்கே யாருமில்லை நண்பனே... உண்மையில் யாருமே இல்லை!

'எனது உடலைத் துருப்புச்சீட்டாக்கி, ஈழ மக்களுக்கான போராட்டத்தைத் தொடருங்கள்' என்பதுதான் உனது தியாகத்தின் முதல் செய்தி. தொழிலாளர் புரட்சி வென்றதன் சாட்சியாக லெனினின் உடலைப் பல வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ரஷ்யா. 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் உடலை ஈழம் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின்பு, கிளர்ந்தது புது எழுச்சி.

உனது உடலை மூன்று நாட்கள் பாதுகாத்து வைத்ததே இளைஞர்களின், மாணவர்களின் கோபாவேசம்தான். உன்னையும் உண்மையையும் உடனே புதைக்கத்தானே விரும்பும் அரசியலும் அதிகாரமும்.

உனது சொந்த ஊர் தூத்துக்குடி வரை ஊர்வலத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற யோசனையைக்கூட செயல்படுத்த முடியவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்' என உளவுத் துறை அரசுக்கு ஓலை அனுப்பியதாம். ஒரு பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கெடாத 'சட்டம் - ஒழுங்கா' கெட்டுவிடப்போகிறது?

உனது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு, வட சென்னைக் குடிசைவாசிகள் ஏற்றிய தீபங்களை 'அணையாத தீபமாக்க' வேண்டியது யார் பொறுப்பு?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான போராட்டங்களில் நிற்கும் இன உணர்வாளர்கள் நீங்கலாக தா.பாண்டியன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோருக்கு உன் சார்பாக நன்றி. பசி, பட்டினி, ஊனம், சாவு எனத் தினம் தினம் நம் மக்கள் அழிந்து மடியும் அவலத்தை, உண்மை நிலவரத்தை மக்கள் சபைக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிலரில் இவர்களும் உண்டு. ஆனால், அரசு அதிகாரத்துக்குச் செவிசாய்ப்பதும், தேர்தல் அரசியலுக்கான 'கூட்டு அரசியல்' யோசனைகளில் தடுமாறிப் பின்வாங்குவதும் இவர்களின் பலவீனம் என்பதையும் நீ அறிவாய்.

பதவிக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் கிஞ்சித்தும் சாய்ந்திடாமல், நம் மக்களுக்காக எவரேனும் முழுதாக முன்வரும் காலம் எப்போது வருமோ... அன்றுதான் உனது உன்னத நோக்கங்களை நிறைவேற்றும் தகுதியும் உண்மையும் உரியவர்களுக்கு வரும்.

முதல்வரைப் பற்றி நீயே கடிதத்தில் 'தெளிவாக' எழுதியிருக்கிறாய். உனது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றிருக்க வேண்டியது 'கல்லக்குடி போராளி'தானே. மனிதச் சங்கிலி, தீர்மானம், ராஜினாமா விளையாட்டு... என 'ஆறப் போட்டு, ஊறப் போட்டு' மறக்கடிக்கிற அரசியல் யுக்தியை இதிலுமா செயல்படுத்துவது? அவரது 'நிலை' நமக்குப் புரிகிறது முத்துக்குமார்.

'முதல்வரே... பகிரங்கமாகச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்று சொல்லுங்கள். நல்லது, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.' - இதைத்தானே நீ சொல்ல வந்தாய்?

சினிமா ஆடியோ ரிலீஸ் விழாக்களில் எல்லாம் கூடிச் சிரிக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட வரவில்லையே நண்பா!

'ஈழத் தமிழர்களின் நிலையை முன்னிட்டு இந்த வருடம் என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்' என அழகிரி சொன்னதுதான் 2009-ன் மெகா மெகா ஜோக். கலைஞர் டி.வி-யில் ஒரு காமெடி சேனல் ஆரம்பித்து, அதற்கு அழகிரியைப் பொறுப்பாளராகப் போடலாம்.

விஜயகாந்த் யாரென்றும் நீ சொல்லிவிட்டாய், நண்பனே... தமிழர்களுக்கான தைரியமும் தனிக் குரலும்தானே அவரது அடையாளமென நம்பினோம்!

மகனுக்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்திருக்கிறாரே என வியந்தோம். ஆனால், உனது அறைகூவலுக்கும் ஈழ மக்களின் துயர்துடைப்புக்கும் கூப்பிட்டால், 'ஷூட்டிங் காம்'... 'கூட்டணி மீட்டிங்காம்'..! சார் ரொம்ப பிஸி. 'லிஸ்ட்ல நம்மளை விட்ருவாய்ங்களோ' என உஷாராகி, 'நாடாளுமன்றத் தேர்தல் புறக் கணிப்பு' என 'போகாத' ஊருக்கு வழிகாட்டி, அறிக்கை அட்டைக் கத்தி சுழற்றுகிறார் கேப்டன். ஈழ மழையில் வேஷம் கலைந்து தெரிவதுதான் அவரது நிஜ முகமோ?

ஜெயலலிதாவைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். 'உறுதியான நிலைப்பாடு' என்கிற பெயரால் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் அவருக்கு, ஈழத் தமிழர்களாவது... எழவாவது?

காங்கிரஸ்காரர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், 'கருமாதி வீட்டில் இட்லிக்கு அடித்துக்கொள்கிறார்கள்.' 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலைவிட்டு தமிழன் தன்னை ஒதுக்கியே வைத்திருக்கிற ஆத்திரம்கூட அவர்களுக்கு இருக்கலாம்.

அதற்காக, தமிழ் இனத்தையேவா ரத்தச் சேற்றில் மிதக்கவிட்டு வெறுப்பைத் தீர்த்துக்கொள்வது? பரவாயில்லை... இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இங்கே இவர்களை நுழையவிடாமல் இவர்களே செய்துகொள்வார்கள்!

'உங்களுக்குத் தமிழன் அழிய வேண்டுமென்றால், எங்கள் பழங்கதைகளில் வருகிற மாதிரி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடுங்கள்' எனக் கதறினாய் நீ. ஆனால், நாம் அளித்த பதவிகளைக்கூட தூக்கி எறிய முடியாத தலைவர்களை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.

கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது எனக்கு.

'அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத
ராணுவம் நடத்திய

கொலைவெறித்
தாக்குதலில்

ஐம்பது
பேர் பலியானார்கள்

ஐந்நூறு
பேர் புலியானார்கள்!'


அது அங்கே... ஆனால், இங்கே?

இங்கேயும் மாற்றத்துக்கான ஒளித் தீற்றல்கள் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழகத் தமிழர்களுக்காகவும், உலகளாவிப் புதிய வியூகங்களில் போராட்டத்தையும், வன்முறைக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்கவும் நமது இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள் நண்பனே.

சுயலாபங்களுக்காகப் பிற உயிரை மதிக்காத ஒவ்வொருவரும் நமக்கு எதிரியே. உனது சிந்தையை, கனவை, கோபத்தை, குரலை, உண்மையை, மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களும் நல்ல இதயங்களும் உனது பெயரால் சேர்வார்கள்.

உன் குரலாகவே மாறி நம் மக்களுக்குச் சொல்கிறேன். இனி உண்ணாவிரதங்கள் வேண்டாம், தீக்குளிப்புகள் வேண்டாம். அதே நேரம், குமுறல்களைப் பூட்டி வைத்திருக்கவும் வேண்டாம் உங்கள் உள்ளத்துக்குள்ளேயே... வாருங்கள் வீதிக்கு, இணைந்து போராட!

-அநீதிகளுக்கெதிரான ஒரு சகோதரன்-

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் !!!!!

வணக்கம்.....

மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால், சுவீடனில் மேற்படிப்பு சம்பந்தமாக வினையூக்கி அவர்களால் இடப் பட்டிருந்த பதிவை காண நேர்ந்தது... அதனால் உந்தப் பட்டு, இங்கிருக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி என்னால் இயன்ற அளவிற்கு தகவல்கள் சேகரித்து இதை எழுத முயன்றுள்ளேன்....

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL)சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!).

பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

http://www.findaschool.org/index.php?Country=France

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு இது இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (பெரும்பாலும் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்). படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது. பல்வேறு வகையான படிப்புகளையும் அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் தனித்தனியே பார்ப்போம்.

கல்வி உதவித்தொகை (Scholaships/Fellowships/Assistantship)

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம்

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக PhD மாணவர்களுக்கு, 1300 - 1700 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம்.

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)

அ) இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு வகையான படிப்புகளையும், அதன் வரையரைகளையும் விரிவாக தெரிந்து கொள்ள EduFrance என்னும் அமைப்பு உதவுகிறது. இது, Allience de Francaise ன் ஒரு அங்கமாகும். இவர்களின் இணைய முகவரிகள்

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

இந்த EduFrance அமைப்பானது இந்தியாவில் ஏழு இடங்களில் (சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், சண்டிகார், மும்பை, புது தில்லி, பூனே) அமைந்துள்ளது.

இவர்கள், பிரான்சின் கல்வி முறைகளைப் பற்றியும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கும் ஆலோசனை வழங்குவார்கள். இந்த அமைப்பினை, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவர்களின் மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

ஆ) இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சில பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் பிரான்சில் உள்ள சில பல்கலைகழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன. [உதாரணம் : லயோலா கல்லூரியின் உயிர்த் தொழில் நுட்பத்துறையினர் (Biotechnology department, Loyala college) பிரான்சின் லில்லி பல்கலைக் கழகத்துடன் (University of Lille) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர்]. அதேபோல, நீங்கள் இப்போது படித்துக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் இது போன்ற ஏதாவது ஒரு பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியையோ, 6 மாதப் படிப்பையோ அல்லது ஒரு ஆண்டு படிப்பையோ (உங்களுடைய படிப்பு 2 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில்) பிரான்சில் உதவித்தொகையுடன் தொடரலாம்.

இ) ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

http://www.france-in-india.org/en/

http://www.egide.asso.fr/jahia/Jahia/

மற்றும், http://www.egide.asso.fr/jahia/Jahia/lang/en/accueil/etudiants

http://www.education.gouv.fr/cid1012/programme-erasmus.html

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=117&Itemid=47

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

http://www.irisa.fr/education/doctoral/teaching/

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.inserm.fr/en/inserm/

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும். அனைத்தும் ஒன்றுகொன்றுதொடர்பில்லாதது. அதே சமயம், ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களின் (இதே போன்ற) பட்ட மேற்படிப்புத் தகவல்களைப் பெற

http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

Masters in Materials Science

தற்சமயம், நான் இருக்கும் பல்கலைக் கழகத்தின் பருப்பொருள் அறிவியலில் துறையில் (Masters in Materials Science), கல்வி உதவித் தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதற்கான தகவல்களைப் பெறவும்,

http://etudes.univ-rennes1.fr/mamaself/english

இதே துறையில் (Materials Science), ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புத் தகவல்களை

http://www.getscholarship.net/79/erasmus-mundus-scholarships-for-european-master-in-material-science என்ற இணையத்தில் பெறலாம்.

Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english

http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm


Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications

இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்.

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

AtoSiM Master of Science

http://www.erasmusmundus-atosim.cecam.org/

International masters in Chemistry at University of Rennes1

http://www.immc.univ-rennes1.fr/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

பொதுவாகவே, மற்ற வளர்ச்சியடைந்த ஐரோப்பியா நாடுகளைப் போலவே, பிரான்சிலும் ஆராய்ச்சி செய்யத்தேவையான சுதந்திரமும், வசதிகளும் மற்றும் வழிகாட்டுதலும் உள்ளது. ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி கவலைப் படத்தேவையில்லை.

அ) குறுகிய கால கல்வி உதவித் தொகை (Fellowship for PhD Sandwich programmes)

அயல்நாட்டு மாணவர்களுக்கு (ஏற்கனவே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளோருக்கு), பிரான்ஸ் அதன் தூதரகங்களின் மூலம் இந்த திட்டத்திற்கான மாணவர்களை தேர்வுசெய்கின்றது. இதன் மூலம் தேர்வு செய்யப் படும் மாணவர்களுக்கு பயணம், கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டு தொகை வழங்குவதோடு மற்றும் இதர செலவீனங்களுக்கு தேவையான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இது 6 மாததிலிருந்து 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

இதற்கான தகவல்களை, http://www.frenchsciencetoday.org/ என்னும் இணையதளைத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மற்றும்

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=68&Itemid=49

http://www.france-in-india.org/en/article.php3?id_article=3774

போன்ற இணைய தளங்களில் இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.

கணிணி மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, நீங்கள் இப்போது ஆராய்சி செய்து கொண்டிருக்கும் ஆய்வகத்தின் நிர்வாகிக்கு (பேராசிரியர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் !!!!) அறிவித்துவிட்டு, பிரான்சில், நீங்கள் ஆராய்சி செய்துகொண்டிருக்கும் துறையில் ஒரு பேராசிரியரை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது தான். பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களை நீங்கள், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் தேடலாம்.

தேவையானவை: இதற்கு நீங்கள் முதலில் ஒரு சுயவிவரத்தை (CV) தயார் செய்து கொள்ளவும், அதில் நீங்கள் உங்களைப் பற்றிய விபரங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடவும். அதனை உங்கள் மின்னஞ்சலில் இணைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளும் பேராசிரியருக்கு அனுப்பவும்.

ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் தகவல்கள்

http://cordis.europa.eu/fp6/mobility.htm

http://ec.europa.eu/euraxess/index_en.cfm

ஆ ) மூன்றாண்டுகளுக்கான உதவித்தொகை (Full time PhD fellowships)

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், முடித்துவிட்டு பணியிலிருப்பவர்கள் என ஆர்வமும் விருப்பமும் இருக்கும் யாவரும், பிரான்சில் மூன்றாண்டுகளுக்கு மேல் கால அவகாசம் எடுக்கும், முழு நேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி பொதுவாக கவலைப் படத்தேவையில்லை.

இதற்கான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது சற்றே சிரமம் தான். ஆனால், சிறிது முயற்சித்தால், தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். உங்களுக்கு, ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், கருத்தரங்குகள், நண்பர்கள் வழியாகவும், உங்களுக்கு விருப்பமான துறையில் ஏதேனும் பேரசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆய்வகங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்வது எளிது. அப்படி இல்லாவிடினும், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களையும் தேடலாம்.

பேராசிரியர்களை உங்கள் சுயவிவரத்துடன் (CV) மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதே மிகச் சிறந்த வழி. அதே சமயம், இப்படிப்பிற்கான விளம்பரங்களையும், தகவல்களையும் நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

www.abg.asso.fr

http://www.cnrs.fr/en/join/Grants-Fellowships.htm

http://www.francecontact.net/

http://www.scholarshipnet.info/

http://www.findaphd.com/

http://france-in-india.org/en/

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

http://www.inria.fr/travailler/jeunes_chercheurs/index.en.html

http://www.irisa.fr/education/subjects/index_html?set_language=en

http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/join_us/inra_is_recruiting_19_phd_students_on_special_contracts

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும், ஏனெனில், அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது. பெரும்பாலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு (PhD Studies) குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல், ஆண்டின் அனைத்து காலங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

அயல் நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களது குழுவினருக்கும், குறுகிய காலம் (6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை), பிரான்சில் ஆராய்சிப் பணிகளைத் தொடரவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், கீழ்கண்ட இணையதளங்களில் தகவல்கள் உள்ளன.

http://www.cnrs.fr/en/join/Postdoctoral.htm

http://www.cefipra.org/cefipra/IPR.htm

http://www.stic-dst.org/download/networkcall.htm

http://www.francecontact.net/

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono/offres_en.htm


இது, இத்தொடரினை எழுத ஊக்கமாக இருந்த பதிவு......... :)

http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html


பின்குறிப்பு : சில இணைப்புகளுக்கு மட்டும் அந்தப் விண்ணப்பத்திற்கான கடைசி தேதியினை குறிப்பிட்டுள்ளேன் ஏதேனும் இணைப்புகள் வேலை செய்யாவிடின் சுட்டிக்காட்டவும். :)


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

எடுத்ததில் பிடித்த படங்களில் சில....

ஒரு இனிய மாலைப் பொழுது


இடம்: Saint Malo, பிரான்ஸ்

மேலிருந்து கீழ்

விமானத்திலிருந்து: ஆஸ்திரியா சுவிஸ் எல்லைப் பகுதி

கல்லிலே கலை வண்ணம்

தலக்காடு சிவன் கோயில், கர்நாடகா, இந்தியா

பளிங்கினால் ஒரு மேலாடை

லூவர் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்ஸ்

வண்ணத்துப்பூச்சியுடன்....


வீட்டின் அருகே

நான்....

இதுவும் வீட்டின் அருகே.....

சீனு .. :)


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!!

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆல்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.  டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே,
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உண்மையில்,
புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும்.


புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.  இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...

எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.
ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டும் சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99


அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.
நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.  ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.