வெள்ளி, 22 ஜனவரி, 2010

அவதார்

படம் வெளியான சமயத்தில் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்ததால் இன்று தான் காணும் வாய்ப்பு கிட்டியது. அதற்காக இல்லையென்றால் உடனே பார்த்திருப்பேன் என அளந்துவிட விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமது பதிவர்கள் பலரின் விமர்சனங்களை படித்ததிலிருந்து படத்தை கணினியிலோ அல்லது தொல்லைக்காட்சியிலோ காணக் கூடாது என தீர்மானமாக முடிவெடுத்திருந்ததால், பிரான்ஸ் வாழ்க்கையில் முதன் முதலில் திரையரங்கில் காணும் முதல் (அதுவும் முதல் 3D) படம் அவதார் !!!

ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை மாறாத பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் இப்படி ஏதாவது ஒரு படம் பார்த்திருக்கின்றேனா என யோசிக்கக் கூடத் தேவையில்லை, இனி எக்காலத்திலும் சொல்லலாம் அப்படிப்பட்ட படம் அவதார் என. தொழில்நுட்ப பயன்பாடுகளின் உச்சம் !!

படத்திற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்திலும், படத்தின் ஒவ்வொரு காட்சியின் உழைப்பிலும் இயக்குனரின் தனித்துவம் தெரிகின்றது. வேற்றுகிரகவாசிகள் என்றாலே மனிதன் என்னும் அப்பாவியை தாக்க வருவதாக காட்டாமல் ஆரம்பிப்பதில் தொடங்கும் இயக்குனரின் அதகளம் இறுதிக் காட்சிவரை அனைவரையும் இருக்கையில் கட்டி வைக்கின்றது. மரங்கள், பறவைகள், இலைகள், குடியிறுப்புகள் என படக் குழுவினரின் சிந்தனையும், உழைப்பும் உண்மையிலேயே வேறு ஏதாவது கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என யோசிக்க வைத்தது.

பறவைகளையும், தாவரங்களையும் பரிவுடன் தொடுவதும், உணவுக்காகவோ அல்லது தற்காப்புக்காகவோ விலங்குகளை தாக்க நேர்ந்தால் கூட அதற்காக மனம் வருந்துவதிலாகட்டும் James Cameron னின் படைப்புக்கள் அற்புதமானவை.


நாவிக்களின் இடங்களை ஆக்கிரமிக்க துவங்கும் பொழுதினில் அவர்களின் குடியிருப்புகளின் மேல் குண்டுகளை வீசி அழிக்கும் காட்சியில் மனம் ஏனோ அமெரிக்கா, இலங்கை, இந்தியா என வரிசையாக உச்சரிக்கத் தவரவில்லை. உச்சகட்ட சண்டையில், நாவிக்களும் விலங்குகளும் இணைந்து தாக்குதல் ஆயுதங்களையும் இராணுவத்தினரையும் சிதறடிக்கும் காட்சியில் மனம் ஒரு குழந்தையைப் போல் குதுகாலித்துக் கொண்டிருந்தது.( நிஜ உலகில் சாத்தியமற்றுப் போனதை கனவுலகில் தேடும் முயற்சி ???) அமெரிக்கா, இலங்கை, இந்தியா என பிரித்துக் கொண்டிருக்காமல் kick out the humans என வாய்விட்டுக் கத்தினேன்.

படத்தைப் பார்த்தால் (ஆக்கிரமிப்பு) இராணுவங்களின் மேல் கொண்டுள்ள பார்வை மட்டுமல்ல, மனித இனம் இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் உண்மை கூட சுடலாம் !!!

கனவுலகம் ??? :-)

ஆக, கனவுலகில் மறுபடியும் பயணிக்க விரும்பி வெளியே வந்தவுடன் அடுத்த வாரக் கடைசியிலும் பார்க்க முன்பதிவு செய்தாயிற்று !!! :)