திங்கள், 31 ஆகஸ்ட், 2009

நாகலாந்து படுகொலைக் காட்சிகள்

வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப் பெற்றது.

42 பழங்குடி இனங்களையும், சற்றேறக்குறைய 35 இலட்சதிற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள தேசிய இனமான நாகாவின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காவும் Nationalist Socialist Council of Nagaland (NSCN) இயக்கம் 1960களிலிருந்து போராடி வருகின்றது. இந்திய மைய அரசுடன், (NSCN) இயக்கத்திற்கு கடந்த 1 ஆகஸ்ட், 1997 லிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்றது. இருந்த போதிலும், அதன் அரசியல், மனித உரிமைப் பிரிவு பொருப்பாளார்களை பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12ல், அசாம் ரைபிள் படைப்பிரிவினரால், பல பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட Salmon Hungyo என்னும் 28 வயதான வாலிபரின் உடலத்தின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

படங்கள் கோரமானவை



கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்




இந்த நிகழ்வைப் பற்றியோ, அல்லது மக்களின் போராட்டத்தைப் பற்றியோ ஏதேனும் செய்தி உண்டா என வெகுஜன ஊடகங்களில் கண்ணில் எண்ணை விட்டு தேடியும் ஒன்றையும் காணோம். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக பெரும்பான்மை ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து வருவதற்கு சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் வாசகர்களின் கள்ள மெளனம். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அரச பயங்கரவாதத்தின் படுகொலைகளை கண்டும் காணாமல் போகும் போக்கே உள்ளது.

வாழ்க ஜனநாயகம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்

நாடு முழுதும் அமைதியாகவும், செழுமையாகவும், மக்களாட்சியில் இந்தியா மிளிர்வதாகவும் எழுதிக் கொண்டிருக்கும் இந்தியப் பத்திரிக்கை/செய்தி ஊடகங்கள் பெரும்பான்மையினோருக்கு வட கிழக்கு மாநிலங்கள் ஒரு இருண்ட, வேண்டப்படாத பிரதேசமே. அவைகளை இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பாதக கருதிக் கொண்டிருப்பதைத் தவிர அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, இதற்கு முன்பு நிகழ்ந்தவை என வேறு சில பயங்கரவாத சம்பவங்களை பட்டியலிடுவதுடன் அவற்றின் கடமைகள் ஓய்ந்துவிடுகின்றன.

1958லிருந்து அங்கிருக்கும் AFSPA (Armed Forces Special Powers Act) பற்றியோ, தனது சொந்த நாட்டின் இராணுவ/பாதுகாப்பு படையினருக்கு எதிராக பெண்கள் கிழர்ந்தெழுந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியது பற்றியோ, அங்கு நாளும் நிகழும் மனித உரிமை மீறல்கள், மாநில உரிமைகள் நசுக்கப்படுவது பற்றியோ வாய் திறவாது இந்தப் பெரும்பாண்மை ஊடகங்கள். ஒவ்வொரு மாநில/தேசிய மக்களுக்கும் இந்தியா என்னும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை அவர்களின் தனித்துவத்திற்கு தரப்படும் மரியாதையிலும் மதிப்பிலும் விளையும் புரிந்துணர்வில் தான் வருமென்பதை இது போன்ற பெரும்பாண்மை ஊடகங்களைப் படிக்கும் பெருவாரியான வாசகர்களும் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களைப் போன்றவர்கள் தாம், எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள் என சொல்வதும் ஒரு முரண் நகையே. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்ட நெடும் காலமாய் வைத்திருக்கும் இந்த "அப்பாவி மக்களாட்சி நாடு", அகிம்சையால் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாய் எண்ணுபவர்கள் அவர்கள்.

இந்நிலையில், மிகச் சமீபத்தில் வடகிழக்கில் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) ஜீலை 23ல் இம்பாலில் பொதுமக்களின் கண்முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு இளைஞரைப் பற்றிய Tehelka புலனாய்வுப் பத்திரிகையின் செய்தி

2) அசாமில்,
Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் காணொளி.

http://www.youtube.com/watch?v=hTArs6ljqgk

இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் நடப்பதை பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்க (ஒரு வகையான கண்கட்டுவித்தை), ஆனால், அதில் மட்டுமே நாட்டு நடப்புகளை கவனிப்போர் இது பற்றிய விவாதங்களையே தவிர்க்கின்றனர். இன்னமும் சிலர், ஒரு படி மேலே போய் இது போன்ற இராணுவ அத்துமீறல்களை ஆதரிக்கவும் செய்கின்றனர். இதே போன்ற ஒரு இழிசெயல் இவர்களுக்கோ அல்லது இவர்களது குடும்பாத்தாருக்கோ/நண்பர்களுக்கோ நிகழ்ந்தால் கூட அவர்கள் அதே போல் விவாதம் புரிவார்களா எனத் தெரியவில்லை. இவர்களின் போலித் தேசியவாதம் கண்ணை மறைக்கின்றது. இந்திய 'இரை'யாண்மையைப் பேசுவோர் இந்த மக்களின் இறையாண்மையைப் பற்றியோ, இவர்களின் அரசியல் தனித்தன்மையைப் பற்றியோ பேச மறுப்பது உண்மையிலேயே அயோக்கியத்தனமானது.

மக்களாட்சி நடப்பதாக கூறிக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாய நாட்டில், பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே நடக்கும் காலவரையற்ற இந்த இராணுவ ஆட்சியின் விளைவுகளே நாள்தோறும் நிகழும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள்.

அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுதல், காலச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் திட்டமிட்ட முறையில் சீரழித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்ம்படுத்த முயலாமல் இராணுவ/போலிஸ் அடக்கு முறையின் மூலமே தீர்வை எட்ட முடியும் என எண்ணும் இந்திய மைய அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கில் மாற்றம் நிகழாத வரை, நிகழ்த்தப்படாத வரை, அங்குள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்க இயலாது.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.tehelka.com/story_main42.asp?filename=Ne080809murder_in.asp

http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html

http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html


பின்குறிப்பு: தங்கமணியின் பதிவினைப் படித்து பின் சில விசயங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த மனநிலையில் எழுதியதால் பதிவிலும், தலைப்பிலும் அதன் தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை !!!!