சனி, 14 ஜனவரி, 2012

ஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டி

ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்ய முயலும் சக்திகளின் ”அரசியல்” நோக்கம் குறித்து மிக முக்கியமான கேள்விகளை எழுப்பும், The Weekend Leader இணையதளத்தில் வெளியான, திரு. செந்தில் குமரன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையானது, மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் பதிப்பாசிரியரின் ஒப்புதலுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பலவருடங்களாக ஜல்லிக்கட்டு நிகழ்வினைப் பற்றிய செய்தி சேகரிப்பாளரான, சீறும் காளைகளை அடக்கும் வீரர்களுடன் உரையாடல்கள் மேற்கொண்ட நான், தமிழர்களுக்கே உரிய வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் நிகழ்வினை சிறுமைப்படுத்தி, அதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறுவதாக சந்தேகிக்கின்றேன். 

இவ்விளையாட்டுச் செய்திகளை கவனிப்பவர்களுக்கு தெரியும், தற்பொழுது இந்த விளையாட்டனது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தப்படுகின்றது என. விலங்குகள் நல வாரியதைச் சார்ந்தவர்கள் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து விளையாட்டினைக் காணவும், காளைகளை சோதனையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டானது தற்சமயம் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட படத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு உயரமான கட்டிடங்களிலிருந்தும், தொங்கிக் கொண்டும், அபாயமான முறையில் பார்வையிட்டவர்கள், தற்பொழுது, ஒழுங்கமைக்கப்பட்ட பார்வையாளர்கள் இருப்பிடங்களிலிருந்து காண்பது தெளிவாகின்றது.

பிரத்தியேகமான சீருடை அணிந்த வீரர்கள் மட்டுமே மைதானத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர். போட்டி நடக்கும் சமயத்தில், காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவர்களும், அவசர கால ஊர்திகளும் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன. அதேசமயம், கால்நடை மருத்துவர்கள், காளைகள் ஏதேனும் போதையேற்றுப் பட்டுள்ளனவா என சோதனையிடுகின்றனர்.

போட்டி நடக்கும் இடமானது, பார்வையாளர்கள் அமரும் இடங்களிருந்து சிறப்பான முறையில் பிரிக்கப்பட்டுள்ளதால், எந்த நிலையிலும் பார்வையாளர்களின் அருகில் காளைகள் வர வாய்ப்பில்லை.

அதே நேரத்தில், தற்சமயம், ஏறுதழுவுதல் விளையாட்டானது சிறந்த சுற்றுலா நிகழ்வாக, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றது. நான் கலந்துரையாடிய வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விளையாட்டு விருப்பமான ஒன்றே, ஏனெனில், போட்டியின் முடிவானது ஸ்பானிய மாட்டு சண்டையின் கொடூரமான முடிவினைப் போல் இல்லாமல் இருப்பதினால்.

கேரளாவில் யானைகள் கூட்டமாக பங்குபெரும் திருவிழாக்களையோ அல்லது மேட்டுக்குடி மக்கள் நடத்தும் உயர்தர நாய்களின் அலங்கார அணிவகுப்பை பற்றியோ வாய் திறவாது, நடிகர்களின் பிரச்சாரத்தினை துணையாகக்கொண்டு, ஜல்லிக்கட்டின் மீது தடை வேண்டி கூக்குரலிடுபவர்கள் நம்மீது ஒரு கலாச்சார யுத்தத்தினை தொடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
முன் போல் இல்லாது, போட்டியில் பங்குபெறும் காளைகள் கால்நடை மருத்துவர்களைக் கொண்டு முழுவதுமாக சோதனை செய்யப்பட்டே போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படும் காட்சி.

தனிப்பட்ட முறையில், கோயில் திருவிழாக்களில் யானைகள் பங்கு பெறுவதிலோ, நாய் கண்கட்சியிலோ எனக்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை. அவை சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும் நல்ல சந்தர்ப்பங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகின்றது? ’கொடூரம்’, ’முரட்டுத்தனம்’, ’காட்டுமிராண்டித்தனம்,’நாகரீகமற்ற’, போன்ற சொற்பதங்கள் பயன்படுத்தப் படுவதின் ”உள்நோக்கம்” என்ன?

”நம்மை” நோக்கி இப்படி கீழ்மைப்படுத்தும் உத்தியில் கையாளப்படும் வாக்கியங்கள், “நாம்” அசைவம்/மாமிசம் உண்ணுபவர்கள் என்பதினால் தான் என்றால், நான் அது குறித்து ஆச்சரியப்படமாட்டேன். ஏனெனில், ஜல்லிக்கட்டு தடை வேண்டுகின்றவர்கள், சைவ உணவுப் பழக்கத்தினை கடுமையாக வழியுறுத்துபவர்கள்.

எவர் வேண்டுமானலும் மைதானத்தில் நுழைந்துவிட முடியாது. தனியாகத் தெரியும் வண்ணம் சீருடை அணிந்த வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வீதிமுறைகளை மீறுபவர்கள் மைதானத்தை விட்டு உடன் வெளியேற்றப்படுவர்.

நகர்ப்புறம் சார்ந்த, தம்மைக் கல்வியாளர்களாக கருதிக் கொள்ளும் ”குழுவினர்”, சட்ட நடவடிக்கைகள் மூலமும், நடிகர்களிடமிருந்து கடிதங்கள் பெற்றும், தாம் சரி, தவறு என என்னும் கருத்துக்களை, கிராமத்து மக்களிடம் திணிப்பதின் மூலம், தாங்களின் பாரம்பரியங்களிலிருந்து அவர்களை துண்டிக்க நினைக்கின்றனர். கலித்தொகை (கிமு 500 முதல் கிபி 200 வரையான) முதலிய தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏறுதழுவுதல் நிகழ்வினை, தமிழர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத விளையாட்டு என பொய்பரப்புரை செய்யும் அளவிற்கும் இவர்கள் செல்கின்றனர்.

கிராமங்களில் இளைஞர்கள் எந்த அளவிறகு இப்போட்டிக்காக தயாராகின்றார்கள் என்பதும், அவர்களின் போட்டி மனோநிலையும், மேட்டுக்குடி மக்களுக்கு புரிந்து கொள்ள முடியாததாகவும், வித்தியாசமாகவும் தோன்றலாம். ஆனால், அதற்காக, அவர்களை எப்படி தாங்களை விடக் கீழானவர்களாக கருதலாம்?

அதைவிட, விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக இவர்கள் போலியாக கூக்குரலிடுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஏனெனில், இந்தப் போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள், அந்த ஒரு நாள் நிகழ்வுக்காக, தங்களின் குழந்தைகளுக்கு ஒப்பாக சிறப்புடன் கவனிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

முன்பிருந்ததைப் போல் அன்றி, காயம்பட்ட வீரர்களை மருத்துவர்கள் உடன் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள், போட்டுக்கு முன்பு காளைகளுக்கு மதுபானம் புகட்டுகின்றனர் என முன்பு ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இப்பொழுது, அதனைக் கண்டறியக் கூடிய கருவிகள் போட்டிக்கு முன்பு பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது நடைமுறல் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, காளைகளின் வாலைத் திருகுதல், அதன் பிறப்புறுப்புக்களில் மிளாகாய்ப் பொடி தேய்த்தல் போன்ற குற்றசாட்டுக்கள் அபத்தமானவை மற்றும் சாத்தியமில்லாதவை. 


இது போன்ற போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள், இயற்கைக்கு முரணான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், தாங்களுடைய இத்தகைய குற்றசாட்டுகளை, உயர்தர நாய்களின் அலங்கார அணுவகுப்பிலும், யானைகள் பங்கேற்கும் கோயில் நிகழ்வுகளிலும், சுமத்தாதது ஏன்? இத்தனை சட்டப் போராட்டங்களுக்கு பிறகும், ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு தடை வேண்டுபவது, தாங்கள் சரியென நினைக்கும் பழக்க வழக்கங்களை, “அதிகாரமற்ற” மக்களின் மேல் திணிக்கும் ”மேட்டுக்குடி” எண்ணம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இதில் நகைப்புக்குறிய விடயமே, கிராமத்திலிருப்பவர்களுக்கு, நகரத்திலிருப்பவர்கள், விலங்குகளைக் கையாளச் சொல்லித் தர முற்படுவது தான். கிராமத்திலிருப்பவர்கள் தாங்களுடைய வளர்ப்புப் பிராணிகளிடம் சிறந்த உறவுப் பாலத்தை மட்டுமல்ல தாங்களுடைய தனிப்பட்ட பொருளாதார நலன்களையும் சேர்த்தே வைத்துள்ளனர்.

இறுதியாக, பல்வேறு முயற்சிகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை சிதைக்க முயல்வதில், ஜல்லிக்கட்டுக்கு தடை வேண்டுவதும் ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.


ஆங்கிலத்தில்: செந்தில் குமரன்
தமிழில்: பதி

பனி விலக

நண்பர்களுக்கு வணக்கம்,

இங்கு நீண்டதொரு உறைநிலைக் காலத்தின் பின் வலைவீச :)

இந்தப் பக்கத்தில் எதையும் பதிவதை (எழுத்து எனச் சொல்ல ஏனோ மனசு வருவதில்லை) நிறுத்தி சற்றேறக்குறைய வருடம் இரண்டாகிவிட்டது. இன்னமும் பொழுது போக்கிற்கும், செய்தித் தொடர்புக்கும் இணையமே ஒரே வழியாக இருப்பினும், பதிவுகளில் பின்னூட்டம் இடக் கூட கடந்த ஒராண்டாக தோணவில்லை. ஆய்வுப் பணி, கட்டுரைகள் தயாரித்தல், ஆய்வறிக்கை சமர்பித்தல்னு நேரமேயில்லைனு கதைவிடலாம்னாலும், முகப்புத்தக நண்பர்கள் உண்மை அறிவார்கள் என்பதால் அதுவும் செல்லுபடியாகது.

சுத்தமா சரக்கே இல்லைனா நான் தான் என்னங்க செய்ய? :) அப்ப அப்ப எழுதலாம்னு வரும் யோசனையையும், Gmail draftல போட்டு வைச்சுட்டு மூஞ்சி புத்தகத்த மேஞ்சுட்டு ஒரு மாதிரியா வாழ்க்கை போகுது. இந்த இடைப்பட்ட காலகட்டத்துல முனைவர் பட்டம் வாங்குனதும், கண்டம் விட்டு கண்டம் தாவுனதும் தான் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள்.

சில முக்கிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்வதற்க்கும், Gmail draftல வருசக்கணக்குல வெட்டிய கிடக்குற சிலதுகளை வெளியே கொட்டவும் என மீண்டும் சில காலம் இங்க சுத்த நேரமும் விருப்பமும் கிடைக்கும்னு நம்புறேன். அதுக்கு அப்புறம் வழக்கம் போல பின்னூட்டம் போட உபயோகிக்க வேண்டியது தான். அதுவும் இல்லைனா, பதிவுகளை மூஞ்சிப் புத்தகத்துல பகிர்ந்துட்டு வழக்கம் போல பதிவுலகச் சேவையாற்றுவேன். என்னையும் மதிச்சு பதிவெழுத வரச் சொன்ன அண்ணாச்சிங்க யாரும் இப்ப பதிவெழுதுறது இல்லங்குறது ஒரு பெரிய மனக்குறை தான். அவங்க மேல இருக்குற மூடுபனியும் மெல்ல விலகும்னு நம்புறேன். விலகனும்.

ஏன்னா, பனி விலக சூரிய வெளிச்சம் கூட வேண்டாம், சூறக் காத்தே போதுங்குறது தான், இந்தக் குறுகிய கால Illinois வாழ்வு கத்துக் கொடுத்த முக்கியமான பாடம் :)

சரிங்க.. அனைவருக்கும் தமிழர் திருநாளம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
பதி

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

எத்தனை வருசம் தாண்டா பெயில் ஆகி பெயிலாகிப் படிப்பே?

ஆய்வு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விசய ஞானம் நம்ம பொது மக்கள் கிட்ட எந்த அளவுக்கு இருக்குதுனு காட்ட, அவங்க வாழ்க்கை நிறைவா ஒன்னும் இல்லைனு சுட்ட, PhD முந்நாள்/இன்னாள் மாணவர்களின் சங்கத்தின் சார்பாக இந்த இடுகை (தொடராக வரக் கூடிய அபாயமுள்ளது)...

:-)

மொதல்ல எனக்கு கிடைச்ச அறிவுரை:

ஆராய்ச்சி உதவியாளார (பார்த்த வேலையை எப்படித் தான் சொல்ல???) சேர்ந்த புதுசு, அந்த இடமும், வளாகமும் அப்படியே பயங்கர உற்சாகத்த கொடுக்கும். ஆனா, PhD, POST-DOC, thesis ன்னு ஒரு மண்ணும் புரியாது, கூடவே பாடமும் தான் (இப்ப மட்டும் புரிஞ்சுடுச்சா என்ன??) அப்ப, பார்க்குறவங்களை எல்லாம் கண்ட கேள்வியும் கேட்டு சாகடிப்பேன், (இப்பவும் தான்). நம்ம தமிழ் ஆட்கள் சகிச்சுவாங்கன்னு வைச்சுக்குங்க. ஒரு நாளு கூட வேலை பார்க்கும் ஒரு பெங்காலியைப் பார்த்து, நீ இப்போ எந்த வருசத்துல இருக்கே, எப்போ thesis வைக்கப் போறேன்னு கேட்டேன். அவ்வளவு தான், அவரு பேசிகிட்டு இருந்த தோரணையே மாறிடுச்சு..

உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையான்னு கேட்டாப்படி

ஏன்னு கேட்டேன்,

இங்க பாரு, வெளியில பசங்க சம்பளத்தையும், பொண்ணு வயசையும் கேட்காதேன்னு பொதுவா சொல்லுற மாதிரி, இங்க இருக்குற யாரு கிட்டயும், எப்ப thesis வைப்பே, எத்தனை பேப்பர் இருக்கு, இதை முடிச்சுட்டு அடுத்து என்ன செய்யப் போறேங்குற இந்த 3 கேள்விகளையும் எப்பவும் கேட்க கூடாது, கடைசி வரைக்கும் நியாபகம் வைச்சுக்கோன்னாரு.

ஆராய்ச்சி செய்யுறவங்க, குறிப்பா மாணவர்கள், பொது மக்களலால எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பாங்கன்னு எனக்கு கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது அப்பத்தான்...

அவரு எந்தக் கடைசின்னு சொல்லலைனாலும்,
அதை இன்னைக்கு வரைக்கும் கடைப்பிடிக்குறேன்னா பார்த்துக்கோங்க... !!!


அடுத்து ஒரு வரலாற்றுச் சம்பவம் !!!!

இடம்: இந்தியாவின் தலை சிறந்த ஆய்வுகள் நடக்கும் (இடம்னு பலராலும் கதை விடப் படுற) ஒரு இடம் !!!!

அங்கே?? வேற எங்கே, தூங்குற நேரத்தை தவிர நமது ஆய்வுப் புலிகள் மிக அதிக நேரம் செலவழிக்கும் Tea board !! தனது ஆய்வறிக்கையை (thesis) வைச்சுட்டு வெளிநாட்டு ஆய்வகம் ஒன்றில் சில/பல காலம் தனது ஆய்வினை தொடரக் காத்திருக்கும் "தமிழ்ப் பேரவை தலை" ஒன்றினை சுற்றி அவரை மாப்பிள்ளை பார்க்க ஊரிலிருந்து வந்துள்ள கும்பல் !!

கொஞ்சம் ஓவர பேசக் கூடிய (அனேகமா பொண்ணோட மாமா??) ஒருத்தரு அப்படியே கேள்வியைக் கேட்டுத் தள்ள, நம்ம ஆளும் சளைக்காமா பதில் சொல்லுறாரு. செய்யும் ஆய்வுகளைப் பற்றி கேட்கத் தொடங்கியதும், தலை அப்படியே விலாவரியா வெளக்க ஆரம்பிக்க,

பொ.மாமா: தம்பி இங்க பாருங்க, நீங்க சொல்லுறது எல்லாம் எங்களுக்கு புரியாது. அதனால அதையெல்லாம் விடுங்க. இப்ப நம்ம புள்ள இஞ்னீயருக்கு படிக்குது முன்னாடி Er ன்னு டிகிரி போட்டுக்கும், இப்ப நீங்க உங்க படிப்பை முடிச்சா என்னான்னு போட்டுக்குவீங்க???

தலை: (படு உற்சாகமாக) Dr ன்னு போட்டுகுவோமுங்க.

பொ.மாமா: ஓ... அப்படினா, நீங்க ஊசி போடுவீங்களா???

தலை: ???????????

இது, இந்த சம்பாசனை தான், நான் அந்த இடத்த விட்டு கிளம்பும் வரைக்கும் பல பேருக்கு வரலாற்று சம்பவம, பால பாடமா சொல்லிக் கொடுத்து, நம்ம பொது சனங்களை கையாள புது வரவுகளை பழக்கபடுத்த பயன் படுத்துறது. இனி அப்படியே, பல சம்பவங்களும், சம்பாசனைகளும் !!!


1 இடம்: ஒரு நாளைக்கு நாலு வேளை தீனி போடக்கூடிய IIScயின் A mess (வயித்துல குடல் இருக்கான்னு சந்தேகப்படும் படியா சேரும் போது இருக்குறவங்க கூட ஒரு வருசத்துக்குள்ள "6 மாசமா" இருக்குறவங்க மாதிரி தெரிவாங்க, சில விதிவிலக்குகளைத் தவிர !!!!). ரெம்ப நாளைக்கு பிறகு ஊருக்கு போயிட்டு வந்த அந்நாளின் தமிழ்ப் பேரவையின் தலை, தலைவிரிக் கோலத்தில் உக்காந்திருக்க, சுத்தியும் கதை கேக்குற ஆர்வத்துல மத்தவங்க.

நண்பர்: என்னடா, ஊருல எல்லாம் எப்படி இருக்காங்க..
தலை: ம்ம்.. நல்லா
நண்பர்: சரி, அதை விடு. இந்த முறை என்ன கேள்வி வந்துச்சு??
தலை: அதை ஏண்டா கேக்குறே,
ஒருத்தங்க
நீ எத்தனை வருசம் தாண்டா இப்படி பெயில் ஆகிப் பெயிலாகி படிப்பேன்னு கேட்டுட்டாங்கடா... :(


2.
பகல்ல, பல பேரு வாத்தியாரோட தொல்லைக்கு பயந்து தூங்குறது, அந்தப் பிரச்சனை இல்லதவங்க Tea board இல்லைனா Coffee board அப்புறம் மெஸ்ல வேளா வேளைக்கு கொட்டுறது, திரும்ப ராத்திரியில Tea board அப்புறம் orkut, gchat, இதுவும் போரடிச்சா தமிழ்மணம். (பலபேருக்கு வாத்தியார் வராத நேரமா, பெரும்பாலும், இரவு இல்லைனா வாரக் கடைசில தான் வேலை பார்க்கவே முடியும்). இத்தனை வேலை இருக்குறதுனால, ஊருக்கு எல்லாரும் போற மாதிரி எங்களால வாரக்கடைசில முன்கூட்டியே டிக்கெட் எல்லாம் முன்பதிவு செஞ்சு போக முடியாது. அதனால என்ன வார நாட்கள்ல போயிடுவோம் !!!! ஒரு முறை, ரொம்ப நாளைக்கு பிறகு ஊருக்கு போலாம்னு Intercity express ல ஈரோட்டுக்கு போயி நம்ம ஊருக்கு பஸ்ஸ புடிக்கலாம்னு காலைல போய்கிட்டு இருந்தேன். உள்ள இருக்குற கேண்டின்ல ஒரு காபி வாங்கி குடிக்கும் போது சகபயணி ஒருத்தர் பார்த்து சிரிச்சுட்டு பேச ஆரம்பிச்சாரு.
அனேகமா தமிழ்ப் பேரவைல அந்த வருசம் போட்ட டி-சர்ட அன்னைக்கு போட்டு இருந்தது கூட ஒரு காரணமா இருக்கலாம் !!!

அவரு பெ(ண்)ங்களூருல IISc க்கு பக்கத்துல இருக்கும் ஒரு மத்திய அரசின் KV பள்ளியில ஆசிரியராம், அவருடைய மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராம். என்னையைப் பத்தி கேட்க, நான் இப்படி IIScல தற்காலிகமா ஆணிபுடுங்குறேன்னு விளக்கப் போக, அவரு அப்படியே பயங்கர ஆர்வமாகி கேள்வி மேல கேட்க, நான் அப்படியே பயங்கர உற்சாகமாகி விளக்க, உள்ளுக்குள்ள ஒரு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பிச்சத நான் கண்டுக்கலை.ஆனா, அவரு IISc, அதன் வளாகம் ஆரய்ச்சி போன்ற தேவையற்ற கேள்விகளைத் தாண்டி சரியா, அந்தக் கேள்விக்கு வந்துட்டாரு,

தம்பி, அப்புறம் சாப்பாட்டுக்கு எல்லாம் என்ன பண்ணுறீங்க??

எனக்கு, அப்பவும் உள்ள அடிச்ச மணி சரியா கேக்கலை (காதுல கோளாரு ??)

என்ன, இப்படி கேட்டுட்டீங்க, இந்தியால எனக்குத் தெரிஞ்சு ஒரு நாளைக்கு 4 வேலை கொட்டிக்க தற்றது எங்க மெஸ்ல தான் தெரியுமான்னு மறுபடியும் கதையை ஆரம்பிச்சேன். அவரு உடனே அவரோட கேள்வியை நல்ல வெளக்க ஆரம்பிச்சுட்டாரு

இல்லைப்பா, சாப்பாட்டுக்கு எப்படி, பார்ட் டைம் வேலை பார்ப்பீங்களா இல்லை, வீட்டுல இருந்து காசு வாங்குவீங்களா??

ஆஹா... இந்த ஆராய்ச்சி போன்ற ஆணி புடுங்குதலும் ஒரு வேலை மாதிரி தான், இதுக்கும் (குறைவா இருந்தாலும்) மாச மாசம் சம்பளம் உண்டுனு எவ்வளவு தான் விளக்கினாலும், அவரு கடைசி வரைக்கும் நம்புன மாதிரி தெரியலை.

அவரும் KV ல வாத்தியார்.... என்னாத்த சொல்ல....


சரி. சொந்தப் புலம்பலை ஒரு தொடரா எழுதுறேன், இப்ப நண்பர்களுடைய அனுபவங்களில் கொஞ்சம்


1) ஏன்பா..உனக்கு நம்ம உள்ளூர் காலேஜ்ல படிக்க இடம் கெடைக்கலையா? எதுக்கு பெங்களூரு போயி படிக்குறே, நல்ல மார்க்கு இல்லையா?

(Masters படிக்க, GATE மூலமா IIT யெல்லாம் வேணாம்னு அதைவிட ரேங்க் அதிகமான IISc யை எடுத்த போது சந்திச்ச கேள்வியாம் !!!!)

software படிச்சிருந்தா 23 வயசுக்குள்ள நல்ல கம்பெனில நிறைய சம்பளத்துக்கு வேலை கெடைச்சு இருக்கும்.
வாழ்க்கையிலேயே செட்டில் ஆகியிருக்ககலாம். எப்பதான் செட்டிலாகப் போறியோ??

POST-DOC ஆ? பையனுக்கு Permanent வேலை இல்லையா? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

(இது 2 இடங்களில் POST-DOC முடிச்ச ஒருத்தருக்கு வந்த கேள்விகள்)


2) டேய் பிஹெச்டி ன்னா என்ன தாண்டா பண்ணுவீங்க, எதுக்குடா உங்களுக்கு பணம் குடுக்கணும். அதனாலா யாருக்கு லாபம்??

டேய் வேலை தேட சோம்பேறித்தனமா இருந்துகிட்டு இப்படி படிக்கிறேன் படிக்கிறேன்னு காலத்தை ஓட்டுறியா?

முடிச்சிட்டு என்னவேலை பாப்பீங்க? காலேஜ்ல வாத்தியார் ஆவுரதுக்கு எதுக்கு இத்தனை வருசம் படிக்கிறீங்க?

(இதுவும் அதே அளவு அனுபவமுள்ள நபருக்குத் தான், ஆனால், உடன் கல்லூரி வரை படித்த நண்பர்களிடமிருந்து !!!!)


3) ஒழுங்கா படிச்சிருந்தா நாலு வருசத்துல வேலைக்குப் போயிருப்ப.. அப்ப ஒழுங்கா படிக்கலை அதான் இத்தனை வயசாகியும் படிச்சிட்டே இருக்க...

(இது உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையல்ல !!!! )

யாரும் படிக்காத பெரீய்ய்ய்ய்ய்ய இந்தப் படிப்பு படிச்சிட்ட.... அதான் சொல்ற பேச்சு எதையும் கேக்க மாட்டேங்கற....

படிப்பாம் பொல்லாத படிப்பு. வருசம் முழுக்க படிச்சிட்டே இருக்க. வேலை கிடைக்குமான்னு கேட்டா விட்டத்த பாக்கற. அப்பறம் என்ன பெரீய்ய்ய்ய்ய்ய இந்தப் படிப்பு.

(இது, இரண்டு மூனு POST-DOC முடிச்சு ஏதாவது, ஏதாவது ஒரு இந்திய ஆய்வகத்தில் பணியில் சேரக் காத்திருக்கையில் மற்றுமொரு நண்பருக்கு, கேள்விகள் உபயம், வேற யாரு நம்ம பாசக்கார சொந்தங்க தான்...)


இன்னமும் வரும், நீங்கள் விரும்பாவிட்டாலும் !!!!! :-)

படத்திற்கு, கூகுளாண்டவருக்கு நன்றி !!!!

வெள்ளி, 22 ஜனவரி, 2010

அவதார்

படம் வெளியான சமயத்தில் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்ததால் இன்று தான் காணும் வாய்ப்பு கிட்டியது. அதற்காக இல்லையென்றால் உடனே பார்த்திருப்பேன் என அளந்துவிட விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமது பதிவர்கள் பலரின் விமர்சனங்களை படித்ததிலிருந்து படத்தை கணினியிலோ அல்லது தொல்லைக்காட்சியிலோ காணக் கூடாது என தீர்மானமாக முடிவெடுத்திருந்ததால், பிரான்ஸ் வாழ்க்கையில் முதன் முதலில் திரையரங்கில் காணும் முதல் (அதுவும் முதல் 3D) படம் அவதார் !!!

ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை மாறாத பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் இப்படி ஏதாவது ஒரு படம் பார்த்திருக்கின்றேனா என யோசிக்கக் கூடத் தேவையில்லை, இனி எக்காலத்திலும் சொல்லலாம் அப்படிப்பட்ட படம் அவதார் என. தொழில்நுட்ப பயன்பாடுகளின் உச்சம் !!

படத்திற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்திலும், படத்தின் ஒவ்வொரு காட்சியின் உழைப்பிலும் இயக்குனரின் தனித்துவம் தெரிகின்றது. வேற்றுகிரகவாசிகள் என்றாலே மனிதன் என்னும் அப்பாவியை தாக்க வருவதாக காட்டாமல் ஆரம்பிப்பதில் தொடங்கும் இயக்குனரின் அதகளம் இறுதிக் காட்சிவரை அனைவரையும் இருக்கையில் கட்டி வைக்கின்றது. மரங்கள், பறவைகள், இலைகள், குடியிறுப்புகள் என படக் குழுவினரின் சிந்தனையும், உழைப்பும் உண்மையிலேயே வேறு ஏதாவது கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என யோசிக்க வைத்தது.

பறவைகளையும், தாவரங்களையும் பரிவுடன் தொடுவதும், உணவுக்காகவோ அல்லது தற்காப்புக்காகவோ விலங்குகளை தாக்க நேர்ந்தால் கூட அதற்காக மனம் வருந்துவதிலாகட்டும் James Cameron னின் படைப்புக்கள் அற்புதமானவை.


நாவிக்களின் இடங்களை ஆக்கிரமிக்க துவங்கும் பொழுதினில் அவர்களின் குடியிருப்புகளின் மேல் குண்டுகளை வீசி அழிக்கும் காட்சியில் மனம் ஏனோ அமெரிக்கா, இலங்கை, இந்தியா என வரிசையாக உச்சரிக்கத் தவரவில்லை. உச்சகட்ட சண்டையில், நாவிக்களும் விலங்குகளும் இணைந்து தாக்குதல் ஆயுதங்களையும் இராணுவத்தினரையும் சிதறடிக்கும் காட்சியில் மனம் ஒரு குழந்தையைப் போல் குதுகாலித்துக் கொண்டிருந்தது.( நிஜ உலகில் சாத்தியமற்றுப் போனதை கனவுலகில் தேடும் முயற்சி ???) அமெரிக்கா, இலங்கை, இந்தியா என பிரித்துக் கொண்டிருக்காமல் kick out the humans என வாய்விட்டுக் கத்தினேன்.

படத்தைப் பார்த்தால் (ஆக்கிரமிப்பு) இராணுவங்களின் மேல் கொண்டுள்ள பார்வை மட்டுமல்ல, மனித இனம் இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் உண்மை கூட சுடலாம் !!!

கனவுலகம் ??? :-)

ஆக, கனவுலகில் மறுபடியும் பயணிக்க விரும்பி வெளியே வந்தவுடன் அடுத்த வாரக் கடைசியிலும் பார்க்க முன்பதிவு செய்தாயிற்று !!! :)

வெள்ளி, 13 நவம்பர், 2009

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

மனதைப் பதறவைக்கும் மற்றும் ஓர் காணொளி இணைப்பு



http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...