சனி, 14 ஜனவரி, 2012

ஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டி

ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்ய முயலும் சக்திகளின் ”அரசியல்” நோக்கம் குறித்து மிக முக்கியமான கேள்விகளை எழுப்பும், The Weekend Leader இணையதளத்தில் வெளியான, திரு. செந்தில் குமரன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையானது, மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் பதிப்பாசிரியரின் ஒப்புதலுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பலவருடங்களாக ஜல்லிக்கட்டு நிகழ்வினைப் பற்றிய செய்தி சேகரிப்பாளரான, சீறும் காளைகளை அடக்கும் வீரர்களுடன் உரையாடல்கள் மேற்கொண்ட நான், தமிழர்களுக்கே உரிய வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் நிகழ்வினை சிறுமைப்படுத்தி, அதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறுவதாக சந்தேகிக்கின்றேன். 

இவ்விளையாட்டுச் செய்திகளை கவனிப்பவர்களுக்கு தெரியும், தற்பொழுது இந்த விளையாட்டனது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தப்படுகின்றது என. விலங்குகள் நல வாரியதைச் சார்ந்தவர்கள் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து விளையாட்டினைக் காணவும், காளைகளை சோதனையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டானது தற்சமயம் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட படத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு உயரமான கட்டிடங்களிலிருந்தும், தொங்கிக் கொண்டும், அபாயமான முறையில் பார்வையிட்டவர்கள், தற்பொழுது, ஒழுங்கமைக்கப்பட்ட பார்வையாளர்கள் இருப்பிடங்களிலிருந்து காண்பது தெளிவாகின்றது.

பிரத்தியேகமான சீருடை அணிந்த வீரர்கள் மட்டுமே மைதானத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர். போட்டி நடக்கும் சமயத்தில், காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவர்களும், அவசர கால ஊர்திகளும் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன. அதேசமயம், கால்நடை மருத்துவர்கள், காளைகள் ஏதேனும் போதையேற்றுப் பட்டுள்ளனவா என சோதனையிடுகின்றனர்.

போட்டி நடக்கும் இடமானது, பார்வையாளர்கள் அமரும் இடங்களிருந்து சிறப்பான முறையில் பிரிக்கப்பட்டுள்ளதால், எந்த நிலையிலும் பார்வையாளர்களின் அருகில் காளைகள் வர வாய்ப்பில்லை.

அதே நேரத்தில், தற்சமயம், ஏறுதழுவுதல் விளையாட்டானது சிறந்த சுற்றுலா நிகழ்வாக, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றது. நான் கலந்துரையாடிய வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விளையாட்டு விருப்பமான ஒன்றே, ஏனெனில், போட்டியின் முடிவானது ஸ்பானிய மாட்டு சண்டையின் கொடூரமான முடிவினைப் போல் இல்லாமல் இருப்பதினால்.

கேரளாவில் யானைகள் கூட்டமாக பங்குபெரும் திருவிழாக்களையோ அல்லது மேட்டுக்குடி மக்கள் நடத்தும் உயர்தர நாய்களின் அலங்கார அணிவகுப்பை பற்றியோ வாய் திறவாது, நடிகர்களின் பிரச்சாரத்தினை துணையாகக்கொண்டு, ஜல்லிக்கட்டின் மீது தடை வேண்டி கூக்குரலிடுபவர்கள் நம்மீது ஒரு கலாச்சார யுத்தத்தினை தொடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
முன் போல் இல்லாது, போட்டியில் பங்குபெறும் காளைகள் கால்நடை மருத்துவர்களைக் கொண்டு முழுவதுமாக சோதனை செய்யப்பட்டே போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படும் காட்சி.

தனிப்பட்ட முறையில், கோயில் திருவிழாக்களில் யானைகள் பங்கு பெறுவதிலோ, நாய் கண்கட்சியிலோ எனக்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை. அவை சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும் நல்ல சந்தர்ப்பங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகின்றது? ’கொடூரம்’, ’முரட்டுத்தனம்’, ’காட்டுமிராண்டித்தனம்,’நாகரீகமற்ற’, போன்ற சொற்பதங்கள் பயன்படுத்தப் படுவதின் ”உள்நோக்கம்” என்ன?

”நம்மை” நோக்கி இப்படி கீழ்மைப்படுத்தும் உத்தியில் கையாளப்படும் வாக்கியங்கள், “நாம்” அசைவம்/மாமிசம் உண்ணுபவர்கள் என்பதினால் தான் என்றால், நான் அது குறித்து ஆச்சரியப்படமாட்டேன். ஏனெனில், ஜல்லிக்கட்டு தடை வேண்டுகின்றவர்கள், சைவ உணவுப் பழக்கத்தினை கடுமையாக வழியுறுத்துபவர்கள்.

எவர் வேண்டுமானலும் மைதானத்தில் நுழைந்துவிட முடியாது. தனியாகத் தெரியும் வண்ணம் சீருடை அணிந்த வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வீதிமுறைகளை மீறுபவர்கள் மைதானத்தை விட்டு உடன் வெளியேற்றப்படுவர்.

நகர்ப்புறம் சார்ந்த, தம்மைக் கல்வியாளர்களாக கருதிக் கொள்ளும் ”குழுவினர்”, சட்ட நடவடிக்கைகள் மூலமும், நடிகர்களிடமிருந்து கடிதங்கள் பெற்றும், தாம் சரி, தவறு என என்னும் கருத்துக்களை, கிராமத்து மக்களிடம் திணிப்பதின் மூலம், தாங்களின் பாரம்பரியங்களிலிருந்து அவர்களை துண்டிக்க நினைக்கின்றனர். கலித்தொகை (கிமு 500 முதல் கிபி 200 வரையான) முதலிய தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏறுதழுவுதல் நிகழ்வினை, தமிழர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத விளையாட்டு என பொய்பரப்புரை செய்யும் அளவிற்கும் இவர்கள் செல்கின்றனர்.

கிராமங்களில் இளைஞர்கள் எந்த அளவிறகு இப்போட்டிக்காக தயாராகின்றார்கள் என்பதும், அவர்களின் போட்டி மனோநிலையும், மேட்டுக்குடி மக்களுக்கு புரிந்து கொள்ள முடியாததாகவும், வித்தியாசமாகவும் தோன்றலாம். ஆனால், அதற்காக, அவர்களை எப்படி தாங்களை விடக் கீழானவர்களாக கருதலாம்?

அதைவிட, விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக இவர்கள் போலியாக கூக்குரலிடுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஏனெனில், இந்தப் போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள், அந்த ஒரு நாள் நிகழ்வுக்காக, தங்களின் குழந்தைகளுக்கு ஒப்பாக சிறப்புடன் கவனிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

முன்பிருந்ததைப் போல் அன்றி, காயம்பட்ட வீரர்களை மருத்துவர்கள் உடன் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள், போட்டுக்கு முன்பு காளைகளுக்கு மதுபானம் புகட்டுகின்றனர் என முன்பு ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இப்பொழுது, அதனைக் கண்டறியக் கூடிய கருவிகள் போட்டிக்கு முன்பு பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது நடைமுறல் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, காளைகளின் வாலைத் திருகுதல், அதன் பிறப்புறுப்புக்களில் மிளாகாய்ப் பொடி தேய்த்தல் போன்ற குற்றசாட்டுக்கள் அபத்தமானவை மற்றும் சாத்தியமில்லாதவை. 


இது போன்ற போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள், இயற்கைக்கு முரணான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், தாங்களுடைய இத்தகைய குற்றசாட்டுகளை, உயர்தர நாய்களின் அலங்கார அணுவகுப்பிலும், யானைகள் பங்கேற்கும் கோயில் நிகழ்வுகளிலும், சுமத்தாதது ஏன்? இத்தனை சட்டப் போராட்டங்களுக்கு பிறகும், ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு தடை வேண்டுபவது, தாங்கள் சரியென நினைக்கும் பழக்க வழக்கங்களை, “அதிகாரமற்ற” மக்களின் மேல் திணிக்கும் ”மேட்டுக்குடி” எண்ணம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இதில் நகைப்புக்குறிய விடயமே, கிராமத்திலிருப்பவர்களுக்கு, நகரத்திலிருப்பவர்கள், விலங்குகளைக் கையாளச் சொல்லித் தர முற்படுவது தான். கிராமத்திலிருப்பவர்கள் தாங்களுடைய வளர்ப்புப் பிராணிகளிடம் சிறந்த உறவுப் பாலத்தை மட்டுமல்ல தாங்களுடைய தனிப்பட்ட பொருளாதார நலன்களையும் சேர்த்தே வைத்துள்ளனர்.

இறுதியாக, பல்வேறு முயற்சிகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை சிதைக்க முயல்வதில், ஜல்லிக்கட்டுக்கு தடை வேண்டுவதும் ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.


ஆங்கிலத்தில்: செந்தில் குமரன்
தமிழில்: பதி

3 கருத்துகள்:

பதி சொன்னது…

ஒவ்வொரு ஆண்டும், ஜல்லிக்கட்டு நிகழ்வினை கண்டுகளிக்கும், “ஒச்சப்பன்” என்ற புனைப்பெயரில் படங்களைப் பகிரும் ஒரு வெளிநாட்டினரின் தளம்

http://www.pbase.com/oochappan/jallikattu

Arun Ambie சொன்னது…

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க விழைவோர் ஜல்லிக்கட்டுக்கு வருமுன்னர் செல்லவேண்டிய இடம் KFC, McDonalds, போன்ற இடங்களே. இவர்கள் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லுக் முறை பிசாசுத்தனமாக இருக்கிறது. அவற்றுடன் ஒப்பிட்டு நோக்குகையில் ஜல்லிக்கட்டு விலங்குகளைப் படுத்துவது பெருமையே தவிர கொடுமையே அல்ல.

பதி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு அருண்.

சமீபத்திய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூட (இணைப்பு இல்லை) சைவப் பட்சிகளாக தங்களைக் கருதுவோரே ஏறுதலுவுதலுக்கு எதிராக விசத்தைக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

KFC, McDonalds, போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தால், பிறகு அவர்களிடம் வருமானம் பார்க்கும் ஊடகங்களில் இவர்கள் குரல் ஏராது அல்லவா?