திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=




10 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

வருத்தமா இருக்கு!

குறும்பன் சொன்னது…

அகிம்சையின் பெயரை சொல்லி நடக்கும் வன்முறை வெறியாட்டம்.

Thekkikattan|தெகா சொன்னது…

பதி,

இதுவே உண்மையான ஒரு மனிதனின் மன நிலையாக இருக்க முடியும். இது போன்ற மனிதனின் எழுத்துக்களில் பாசாங்கு இருக்க முடியாது. இது போன்ற மனிதர்கள் காணக்கிடைப்பது அரிதிலும் அரிது. இவரின் புத்தகங்களே நம் கைகளில் வைத்திருப்பதற்கு தகுதியானவை என்று தோணச் செய்கிறது. எஸ். ரா விற்கு எனது வணக்கங்கள்.

Unknown சொன்னது…

உண்மையாவே வருத்தமா இருக்கு. என்ன பண்றதுன்னும் தெரியல.

தமிழ்நதி சொன்னது…

நானும் வாசித்தேன். என்னத்தைச் சொல்ல... மீண்டும் ஒரு தடவை கலங்கிப்போனேன். எழுத்தும் அரசியலும் ஒன்றுதானோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

கையேடு சொன்னது…

என்னத்த சொல்றது

பதி சொன்னது…

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பழமைபேசி அண்ணா, குறும்பன், தெக்கிக்காட்டான், LRT, தமிழ்நதி மற்றும் கையேடு...

தெகா,

//இவரின் புத்தகங்களே நம் கைகளில் வைத்திருப்பதற்கு தகுதியானவை என்று தோணச் செய்கிறது. எஸ். ரா விற்கு எனது வணக்கங்கள்.//

இதுவே எனக்கும் தோன்றிகிறது...

தமிழ்நதி,

//மீண்டும் ஒரு தடவை கலங்கிப்போனேன்.//

ஆம்...

//எழுத்தும் அரசியலும் ஒன்றுதானோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது.//

எழுத்தும் அரசியலும் அதற்கான ஜால்ரா சத்தங்களும் இன்றைய காலப் பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை...

பெயரில்லா சொன்னது…

//ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது//

ம்ம்ம்ம்ம்ம்

ஆனால், அந்த அல்பங்களையும் கொண்டாட சில அறிவு ஜீவிகள்...

இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல???

கிருஷ்ணா சொன்னது…

//காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும்
சொல்லும்//

எலும்புகள் பேசப்போவதில்லை என்று அதைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் அறிவாளிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

யாரிடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஒட்டுமொத்தமாகத் தகர்ந்துபோகும்போது ஒரு இனத்துக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கும். ஒன்று அடங்கிப்போதல். அல்லது...........

இப்படித்தான் மனச்சாட்சியற்ற இந்த உலகம் பயங்கரவாதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

பதி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஸ்ணா.

பேசப்படாத எலும்புகளின் வழிவந்தோர் அரியணை ஏறியது இங்கு நடந்துள்ளது. பார்ப்போம் என்ன தான் நடக்கும் என...

ஆனால், வாழும் காலங்களில் எத்தனை வகையான குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகப் போகின்றோமோ.. அது தான் விளங்கவில்லை...