செவ்வாய், 19 மே, 2009

நம்பிக்கை களம் காத்தவர்களுக்கு....

தமிழ் என்னும் சொல்லுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் இருக்கும் உணர்வுள்ள தமிழர்களை உங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இணைத்தவர்களே...

இனவாதத் தேசத்தில் ஒடுக்கப்பட்ட எம் இனத்தின் காவற்காரர்களாய் நின்று நம்பிக்கை களம் காத்தவர்களே...

லட்சக்கணக்கில் அப்பாவிகள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுதுகளில் வாய்மூடிக் கிடந்தவர்களெல்லாம் இன்று உங்கள் மரணத்தைக் கூட வேடங்களிட்டு விற்றுத் தீர்க்கின்றனர்.. மாவீரர்களுக்கு மரணமில்லை என்னும் உண்மையை சில சமயம் கண்ணீர்த்திரை மறைக்கின்றது.

மயானமாகிவிட்ட நிலங்களில் புகைமண்டலத்தின் நடுவே உயரும் சிங்க கொடியில் சரிகின்றன எமது ஆசைகள்... அகோரப் பசி கொண்ட யுத்தத்தின் வடுக்கள் மனதை ஒரு நிலைகொள்ளாது அலைக்கழிக்கின்றன... உங்களது வெற்றியில் இறுமாந்திருந்த காலங்களைப் போல இந்த அவல நிலையும் விரைவில் கடந்து போகட்டும்...


பத்து தலைமுறைக்கும் மேல் சொத்து சேர்க்க துடிக்கும் எமது ஈனத் தலைமைகளுக்கோ அவர்தம் தொண்டரடிப் பொடியார்கோ ஒரு போதும் விளங்கப் போவதில்லை உங்களது வீரம் செறிந்த அந்த மானம் காக்கும் அறப்போர்.

சொகுசு வாழ்க்கை, புலிப்பாசிசம், முக்கியத் தலைவர்கள் களத்தில் இல்லை, ஓடி ஒளிந்து கொண்டார்கள், பிள்ளைகள் வெளிநாட்டில் என கூவித் திரிந்த இணையப் போராளிகள் இனி வேறு காரணங்களை தேடலாம்.

தேடட்டும்...

ஆயினுமென்ன, தமிழனை உலகிற்கு அடையாளப்படுத்தவும், அவன் சுயமரியாதையுடனும், தனக்கென ஒரு சொந்த நாட்டிலும் வாழவேண்டும் என ஆசைப்பட்டு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்து உரிமைப் போர் புரிந்த சுயமரியாதை வீரர்களும் அவர்தம் தளபதியார்களும் என்றும் நினைவில் நிறுத்தப்படுவர்.....

இலங்கை என்னும் பவுத்த சிங்கள இனவெறி முகமூடி அணிந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஈரான் என நீங்கள் களத்தில் எதிர்கொண்ட எதிரிகளும் துரோகிகளும் தான் எத்தனை எத்தனை?

எத்தனை ஆயிரம் எதிரிகள் வந்தபோதிலும், தமிழ்மக்களின் நலனுக்காகவும் அவர்தம் விடுதலைக்காகவும் கொண்ட கொள்கையில் இருந்து கடைசிவரை மாறது போரிட்டு மடிந்த அனைவருக்கும் வீரவணக்கங்கள்.... யுத்தம் தின்று செரித்த எமது மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....

உங்களைத் தவிர வேறு யாரைச் சொல்வோம் மாவீரர்கள் என....

3 கருத்துகள்:

பதி சொன்னது…

நேற்றைய பதிவு, சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. அச்சமூட்டும் வதந்திகளைப் பற்றிய விபரங்களை திரு'வின் பக்கத்தில் காணலாம்.

http://aalamaram.blogspot.com/2009/05/blog-post_19.html

சாந்தி சொன்னது…

இறுதிவரை நின்று போராடி எம் தோழர்கள் இறந்தார்கள். மாவீரம் மரணத்தை வென்றதென்று சொல்லிவிட முடியாபடி அவர்கள் துரோகத்தால் பலியெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாந்தி

பதி சொன்னது…

//மாவீரம் மரணத்தை வென்றதென்று சொல்லிவிட முடியாபடி அவர்கள் துரோகத்தால் பலியெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

ஆம் சாந்தி...