செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்

நாடு முழுதும் அமைதியாகவும், செழுமையாகவும், மக்களாட்சியில் இந்தியா மிளிர்வதாகவும் எழுதிக் கொண்டிருக்கும் இந்தியப் பத்திரிக்கை/செய்தி ஊடகங்கள் பெரும்பான்மையினோருக்கு வட கிழக்கு மாநிலங்கள் ஒரு இருண்ட, வேண்டப்படாத பிரதேசமே. அவைகளை இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பாதக கருதிக் கொண்டிருப்பதைத் தவிர அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, இதற்கு முன்பு நிகழ்ந்தவை என வேறு சில பயங்கரவாத சம்பவங்களை பட்டியலிடுவதுடன் அவற்றின் கடமைகள் ஓய்ந்துவிடுகின்றன.

1958லிருந்து அங்கிருக்கும் AFSPA (Armed Forces Special Powers Act) பற்றியோ, தனது சொந்த நாட்டின் இராணுவ/பாதுகாப்பு படையினருக்கு எதிராக பெண்கள் கிழர்ந்தெழுந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியது பற்றியோ, அங்கு நாளும் நிகழும் மனித உரிமை மீறல்கள், மாநில உரிமைகள் நசுக்கப்படுவது பற்றியோ வாய் திறவாது இந்தப் பெரும்பாண்மை ஊடகங்கள். ஒவ்வொரு மாநில/தேசிய மக்களுக்கும் இந்தியா என்னும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை அவர்களின் தனித்துவத்திற்கு தரப்படும் மரியாதையிலும் மதிப்பிலும் விளையும் புரிந்துணர்வில் தான் வருமென்பதை இது போன்ற பெரும்பாண்மை ஊடகங்களைப் படிக்கும் பெருவாரியான வாசகர்களும் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களைப் போன்றவர்கள் தாம், எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள் என சொல்வதும் ஒரு முரண் நகையே. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்ட நெடும் காலமாய் வைத்திருக்கும் இந்த "அப்பாவி மக்களாட்சி நாடு", அகிம்சையால் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாய் எண்ணுபவர்கள் அவர்கள்.

இந்நிலையில், மிகச் சமீபத்தில் வடகிழக்கில் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) ஜீலை 23ல் இம்பாலில் பொதுமக்களின் கண்முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு இளைஞரைப் பற்றிய Tehelka புலனாய்வுப் பத்திரிகையின் செய்தி

2) அசாமில்,
Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் காணொளி.

http://www.youtube.com/watch?v=hTArs6ljqgk

இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் நடப்பதை பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்க (ஒரு வகையான கண்கட்டுவித்தை), ஆனால், அதில் மட்டுமே நாட்டு நடப்புகளை கவனிப்போர் இது பற்றிய விவாதங்களையே தவிர்க்கின்றனர். இன்னமும் சிலர், ஒரு படி மேலே போய் இது போன்ற இராணுவ அத்துமீறல்களை ஆதரிக்கவும் செய்கின்றனர். இதே போன்ற ஒரு இழிசெயல் இவர்களுக்கோ அல்லது இவர்களது குடும்பாத்தாருக்கோ/நண்பர்களுக்கோ நிகழ்ந்தால் கூட அவர்கள் அதே போல் விவாதம் புரிவார்களா எனத் தெரியவில்லை. இவர்களின் போலித் தேசியவாதம் கண்ணை மறைக்கின்றது. இந்திய 'இரை'யாண்மையைப் பேசுவோர் இந்த மக்களின் இறையாண்மையைப் பற்றியோ, இவர்களின் அரசியல் தனித்தன்மையைப் பற்றியோ பேச மறுப்பது உண்மையிலேயே அயோக்கியத்தனமானது.

மக்களாட்சி நடப்பதாக கூறிக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாய நாட்டில், பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே நடக்கும் காலவரையற்ற இந்த இராணுவ ஆட்சியின் விளைவுகளே நாள்தோறும் நிகழும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள்.

அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுதல், காலச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் திட்டமிட்ட முறையில் சீரழித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்ம்படுத்த முயலாமல் இராணுவ/போலிஸ் அடக்கு முறையின் மூலமே தீர்வை எட்ட முடியும் என எண்ணும் இந்திய மைய அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கில் மாற்றம் நிகழாத வரை, நிகழ்த்தப்படாத வரை, அங்குள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்க இயலாது.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.tehelka.com/story_main42.asp?filename=Ne080809murder_in.asp

http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html

http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html


பின்குறிப்பு: தங்கமணியின் பதிவினைப் படித்து பின் சில விசயங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த மனநிலையில் எழுதியதால் பதிவிலும், தலைப்பிலும் அதன் தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை !!!!

9 கருத்துகள்:

பதி சொன்னது…

ஞாநியின் பல சிந்தனைகளில் மாற்றுக் கருத்து இருப்பினும், இராணுவம், தேசம், தேசபக்தி தொடர்பாக, மார்ச் 2008ல், நாறும் தேசபக்தி என்னும் தலைப்பில் ஓ பக்கங்களில் எழுதியதில் சில வரிகள் இங்கு சுட்டிக் காட்டுவது மிகப் பொறுத்தமாக இருக்கும்.

.
.
தேசபக்தி பற்றிய இன்னொரு குழப்பம் எப்போதுமே ராணுவம் சம்பந்தப்பட்டது. ராணுவங்களோ போலீஸோ தேவைப்படாத ஒரு தேசமாக நாம் இருக்கவேண்டும் என்பது என் பல லட்சியக்கனவுகளில் ஒன்று. இன்றைய உலகத்தின் யதார்த்த நிலையில் அது சாத்தியமில்லையென்பதால், அவற்றை ஒரு ‘நெசசரி ஈவில்’ (தமிழில் _ அவசியமான தொல்லை?) என்பதாக சகித்துக் கொள்கிறேன்.
.
.
உண்மையான தேசபக்தி என்பது உண்மை நிலையை மக்களுக்குச் சொல்வதுதான் என்று இன்றும் நான் நம்புகிறேன். தேசம் என்பது அதில் இருக்கும் மக்கள்தான். வெறும் மண்ணும் கல்லும் அல்ல. தேசத்தில் இருக்கும் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதுதான் தேசபக்தி.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏன் வருகிறது என்பதைப் பற்றி இன்னும் கூட தேசம் போதுமான அக்கறை காட்டவில்லை. இப்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்ததும் விதவிதமான குரல்கள் எழுகின்றன. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் முதல் எந்த விதமான மான்யங்களும் தரப்படக் கூடாது என்பது இதில் ஒரு குரல்.

ராணுவத்துக்கு நாம் செய்யும் செலவைப் பற்றி இங்கே ஒரு முணுமுணுப்பு கூட கிடையாது. இந்த வருட பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கியிருக்கும் தொகை ஒரு லட்சத்து ஐயாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்கள்! அதாவது ஒரு கோடி, ரெண்டு கோடி என்று எண்ணிக் கொண்டே போனால், 1,05,600 கோடி... கற்பனை செய்யவே பிரும்மாண்டமான தொகை! இது வீண் வெட்டிச் செலவு என்று சொல்லுவதனால் என்னை தேச விரோதி என்று சொன்னால், அப்படிச் சொல்லுபவர்கள்தான் உண்மையில் தேச விரோதிகள்.
.
.
இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றி ஓரளவாவது தமிழகத்தில் பேசப்படுகிறது. இந்தியாவுக்குள்ளேயே வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் செய்யும் கொடுமைகள் பற்றி கண்டுகொள்வதே இல்லை. மணிப்பூரில் பெண்கள் எல்லாரும் நிர்வாணமாக ஊர்வலம் போய் ராணுவத் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தபிறகும், எட்டு வருடமாக கவிஞர் ஐரம் ஷர்மிளா உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்த போதும், அங்கே கொடூரமான, ராணுவச்சட்டத்தை எந்த அரசியல் கட்சியும் திரும்பப் பெறத் தயாராக இல்லை. மக்களுக்காக ராணுவமும் போலீஸ§ம் என்பது மாறி, அவற்றுக்காக மக்கள் என்ற அணுகுமுறைதான் ஏற்பட்டிருக்கிறது.
.
.
ஆட்கொல்லி நோயில் உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கறுப்புப்பூனைக் காவல் அளித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட முட்டாள்தனத்தில் நம் தேசமே தேசபக்தி என்ற பெயரில் ஈடுபட்டிருக்கிறது.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-02/pg15.php

கையேடு சொன்னது…

மக்களாட்சி என்றால் கிலோ என்ன விலை நிலமைதான் இருக்கிறது, வல்லரசு இந்தியாவில்.

பதி சொன்னது…

வாங்க கையேடு,

//மக்களாட்சி என்றால் கிலோ என்ன விலை நிலமைதான் இருக்கிறது, வல்லரசு இந்தியாவில்.//

நீங்க ஒரு பதிவில சொன்ன மாதிரி, இன்னமும் எத்தனை குற்றங்களைத் தான் பார்க்க போகிறோமோ??? ஆனால், இவை நடப்பது என்னவோ நமது வரிப்பணத்தில் தான்...

//வல்லரசு இந்தியா//

இது அணுகுண்டு வைச்சு இருக்குறதுனால தானே???? :)))))

அப்போ, பாகிஸ்தான், வடகொரியா கூட வல்லரசு தான் !!!!!!

வல்லரசு இந்தியாவில் இருக்கும், ஊட்டச் சத்து இன்மை போன்ற குறைபாடுகள், பட்டினிச் சாவுகளைப் பற்றி

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6046718.stm

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8178072.stm

http://www.hindu.com/2009/08/04/stories/2009080453000800.htm

பதி சொன்னது…

இம்பாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அங்கு நடபெறும் நிகழ்வுகள்

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8189800.stm

செல்வநாயகி சொன்னது…

நல்ல பதிவு பதி, இப்போதுதான் கவனித்தேன்.

பதி சொன்னது…

தாங்களது வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி செல்வநாயகி.

பதி சொன்னது…

மணிபூரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 32 போலி என்கவுண்டர்கள் எந்தவித விசாரணையும் இன்றி

http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1143894

Sanjai Gandhi சொன்னது…

இவைகளைக் களைய தீர்வாக எதை முன்வைக்கிறீர்கள்?

பதி சொன்னது…

வருகைக்கு நன்றி SanjaiGandhi.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி தேசியத்தின் பெயரில் நீடித்துவரும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எது தீர்வாக இருக்கும் என ஒற்றை வினாவினை வினவியுள்ளீர்கள் !!!!!!

1958லிருந்து அங்கிருக்கும் AFSPA (Armed Forces Special Powers Act) நீக்குவது உடனடி நிவாரணமாக இருக்கும். அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவு படுத்துவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக ஆறுதலைத் தரும்.

ஆனால், அங்கு ஒரு நிலையான/ஒழுங்கான சூழ்நிலையை ஏற்படுத்த, மக்கள் பிரதிநிதிகளின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டும், பொது வாக்கெடுப்பின் மூலமுமே தீர்வு காண முயல வேண்டும்.

மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரத்தின் மூலமும், இராணுவ பலத்தின் மூலமும் வரக்கூடியது நிரந்தரமானது அல்ல என்பதே எனது கருத்து.