இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.
************************************************************************************
இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html
இனி அக்கட்டுரையிலிருந்து..
"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"
"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"
இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.
புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.
இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.
இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.
ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விரும்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.
இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.
9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"
14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"
இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.
12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."
19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"
21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"
இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.
"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய் நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.
நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.
மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐ.நா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். "செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.
மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
- Philippe Bolopion************************************************************************************