ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



புதன், 9 செப்டம்பர், 2009

திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்

Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நாள்: 12/09/09

நேரம்: காலை 10.30 மணியிலிருந்து

இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளி (திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிர்ப்புரம்), வெங்கடநாரயண சாலை, தி. நகர், சென்னை 17




கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்கள் விபரம் பின்வருமாறு

Mr Rajesh Sundaram, Deputy Editor, Headlines Today, Delhi
Mr AS Paneerselvam, Sr. Journalist
Mr Devasahayam, I.A.S (Retd)
Ms Kavitha Muralidharan, The Week
Mr Venkatramanan, Sr Journalist, Times of India
Mr Peer Mohammed, Deccan Chronicle


தொடர்புக்கு: savetamil@gmail.com, save-tamils@googlegroups.com,
98400 90898, 98844 68039

பின்குறிப்பு: இந்த நிகழ்வினை உங்களது நண்பர்களுக்கு அனுப்பியும், இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.



என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

வியாழன், 25 ஜூன், 2009

ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09

ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.

நாள்: 28/06/09

நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை



கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு

விடுதலை ராசேந்திரன் - ஈழப் போரட்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும்
தந்தை ஜெகத் கஸ்பர் - வதைமுகாம்களில் அடைபட்டுள்ள மக்களின் இன்றைய அவலநிலை
பூங்குழலி - சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்
அருள் ஜார்ஜ்(PUCL) - சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள்

இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக சில குறும்படங்களை ஒளிபரப்பவும், புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்து முகாம்களிலிருக்கும் சில ஈழத்தமிழர்களும், சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: பல்வேறு பணிச்சூழல், தனிப்பட்ட வேலைகளின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களினால் சென்றமுறையைப் போல் முன்கூட்டியே இந்த நிகழ்வை பலருக்கும் தெரியப்படுத்த இயலவில்லை என அறிய நேர்ந்தது. ஆகையால், சென்ற முறை நீதிக்காண அமைதிப் பேரணி நிகழ்விற்கு பரப்புரை செய்ததைப் போல், இந்த முறையும் இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

வியாழன், 4 ஜூன், 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.

************************************************************************************

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..

"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"


இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விரும்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.

இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய் நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐ.நா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். "செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=




செவ்வாய், 19 மே, 2009

நம்பிக்கை களம் காத்தவர்களுக்கு....

தமிழ் என்னும் சொல்லுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் இருக்கும் உணர்வுள்ள தமிழர்களை உங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இணைத்தவர்களே...

இனவாதத் தேசத்தில் ஒடுக்கப்பட்ட எம் இனத்தின் காவற்காரர்களாய் நின்று நம்பிக்கை களம் காத்தவர்களே...

லட்சக்கணக்கில் அப்பாவிகள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுதுகளில் வாய்மூடிக் கிடந்தவர்களெல்லாம் இன்று உங்கள் மரணத்தைக் கூட வேடங்களிட்டு விற்றுத் தீர்க்கின்றனர்.. மாவீரர்களுக்கு மரணமில்லை என்னும் உண்மையை சில சமயம் கண்ணீர்த்திரை மறைக்கின்றது.

மயானமாகிவிட்ட நிலங்களில் புகைமண்டலத்தின் நடுவே உயரும் சிங்க கொடியில் சரிகின்றன எமது ஆசைகள்... அகோரப் பசி கொண்ட யுத்தத்தின் வடுக்கள் மனதை ஒரு நிலைகொள்ளாது அலைக்கழிக்கின்றன... உங்களது வெற்றியில் இறுமாந்திருந்த காலங்களைப் போல இந்த அவல நிலையும் விரைவில் கடந்து போகட்டும்...


பத்து தலைமுறைக்கும் மேல் சொத்து சேர்க்க துடிக்கும் எமது ஈனத் தலைமைகளுக்கோ அவர்தம் தொண்டரடிப் பொடியார்கோ ஒரு போதும் விளங்கப் போவதில்லை உங்களது வீரம் செறிந்த அந்த மானம் காக்கும் அறப்போர்.

சொகுசு வாழ்க்கை, புலிப்பாசிசம், முக்கியத் தலைவர்கள் களத்தில் இல்லை, ஓடி ஒளிந்து கொண்டார்கள், பிள்ளைகள் வெளிநாட்டில் என கூவித் திரிந்த இணையப் போராளிகள் இனி வேறு காரணங்களை தேடலாம்.

தேடட்டும்...

ஆயினுமென்ன, தமிழனை உலகிற்கு அடையாளப்படுத்தவும், அவன் சுயமரியாதையுடனும், தனக்கென ஒரு சொந்த நாட்டிலும் வாழவேண்டும் என ஆசைப்பட்டு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்து உரிமைப் போர் புரிந்த சுயமரியாதை வீரர்களும் அவர்தம் தளபதியார்களும் என்றும் நினைவில் நிறுத்தப்படுவர்.....

இலங்கை என்னும் பவுத்த சிங்கள இனவெறி முகமூடி அணிந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஈரான் என நீங்கள் களத்தில் எதிர்கொண்ட எதிரிகளும் துரோகிகளும் தான் எத்தனை எத்தனை?

எத்தனை ஆயிரம் எதிரிகள் வந்தபோதிலும், தமிழ்மக்களின் நலனுக்காகவும் அவர்தம் விடுதலைக்காகவும் கொண்ட கொள்கையில் இருந்து கடைசிவரை மாறது போரிட்டு மடிந்த அனைவருக்கும் வீரவணக்கங்கள்.... யுத்தம் தின்று செரித்த எமது மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....

உங்களைத் தவிர வேறு யாரைச் சொல்வோம் மாவீரர்கள் என....

வியாழன், 23 ஏப்ரல், 2009

"இந்தி"யர் என்று பெருமிதம் கொள்வோம்....

"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்
சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்று
அகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்
காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்து
ஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில்

மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்.....

புதன், 18 மார்ச், 2009

ஈழம் - இணைய முன்னெடுப்புகள், அந்நிய படைகள், மற்றவை

உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன தோன்றுகின்றது.



1) இலங்கையில் சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான மக்கள் அமைப்பு People for Equality And Relief in Lanka - PEARL ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பரப்ப எடுத்து வரும் முயற்சிகளை அவர்களின் இணையபக்கத்தின் மூலம் அறியலாம். அமெரிக்கா வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்துவதிலும் இலங்கையின் போர்க் குற்றங்களை அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அமெரிக்கா பொது மக்களிடமும் அங்கு இருக்கும் ஊடகங்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், வன்னிப் பகுதியிலிருந்து மக்களை அமெரிக்கா தலைமையில் வெளியேற்றும் நடவடிக்கையை செயல் இழக்கச் செய்யமுடியும் என எண்ணும் இவர்கள் அது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்'ல் 1/4 பக்க விளம்பரத்திற்கு தேவையான $13,000 தொகையினை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சிக்கு உதவ விரும்புவோர் அவர்களின் இணையபக்கத்திற்கு சென்று உதவ முயலுங்கள்.



2) அதே சமயம், ஒபாமாவுக்கான தமிழர்கள் - Tamils for Obama அமைப்பானது, வன்னியிலுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் அங்கு ஏற்படத்தப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு கருத்துக்கணிப்பினை நடத்துகின்றது. ஒருசமயம் வெளி நாட்டுப் படைகள் உள்நுழைந்தால் அவைகளின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் இது அமைந்துள்ளது.


தமிழில் : www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html


ஆங்கிலத்தில் : http://www.tamilsforobama.com/polling/poll.asp



இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்வது மிக எளிதான ஒன்று.



3) சர்வதேச நிதிக் கண்காணிப்பு அமைப்பிற்கு - International Monetary Fund இலங்கை அரசிற்கு கடனுதவி வழங்க இருப்பதை நிறுத்த வேண்டி ஒரு விண்ணப்பம்.


கடிதம் அனுப்ப இங்கே சொடுக்குங்கள்

அமெரிக்காவில் வாழ்பவர்கள் இணைப்பிற்கு இங்கே அழுத்துங்கள்!

பிற நாடுகளில் வாழ்பவர்கள் இங்கே அழுத்துங்கள்!


நண்பர்களே மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றிலும் உங்களாலான பங்களிப்பினை செய்யுங்கள்...



பின்குறிப்பு: இதுபோன்ற இணையபரப்புரைகளில் அதிக நம்பிக்கையின்றி இருந்தேன் (சமயத்தில் அதீத அவநம்பிக்கையுடன் இருந்தவர்களில் நானும் ஒருவன்). இன்போசிஸ் நிறுவனரின் முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்ததில் இது போன்ற இணைய பரப்புரையும் (வேறு காரணங்கள் இருப்பினும்) ஒரு முக்கிய காரணம் என எண்ணுகிறேன். ஆகையால், நீங்கள் இது போன்ற பரப்புரைகளில் பங்கெடுப்பதுடன், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுகின்றவர்களிடமும் அறியச் செய்யுங்கள்.



வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழனின் உணர்ச்சிவசப்படலும்....

புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் - செய்தி

இது போன்ற தாக்குதல்களினால் வரும் உற்சாகத்தில் அங்கு அவலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலமையை மறந்துவிடக் கூடாது.. அதனால் தான் புலிகளே கடந்த 2 மாத காலமாக தங்களது கள நிலைமையை அடக்கி வாசித்தனர்....


இந்த 2009ம் ஆண்டு துவக்கத்திலிருந்து மட்டும் சிங்களம் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை எத்தனை?? அதற்காக துவக்கப்பட்ட இழைகள் எத்தனை? இங்கு பாருங்கள் அரை மணி நேரத்தில் எத்தனை இடுகைகள்??????? !!!!



தமிழா..... உணர்ச்சிவசப்பட உன்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை !!!!

திங்கள், 16 பிப்ரவரி, 2009

இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி நிகழ்வுகள்

நண்பர்களே,

வரும் நாட்களில் இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி/கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பேரணி

நாள்:
வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்: காலை 10.30 முதல் மாலை 4 வரை.

மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை காண்க.


நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க், குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாக இங்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் http://www.pearlaction.org/ மற்றும்https://www.tamilsagainstgenocide.org/ என்னும் தளத்திற்கு செல்வதன் மூலம், நீங்கள் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் இனப்படுகொலைக்கான உதவியினை கண்டித்தும் அதை நிறுத்த வேண்டியும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: (18-02-09) புதன் கிழமை
நேரம்: காலை 10 லிருந்து மதியம் 2 வரை.

இடம்: High Commission of India

India House
Aldwych

London

http://hcilondon.in/contactus.php


ஜெர்மனியில்
கவனயீர்ப்பு நிகழ்வு

ஜெர்மனியின்
Dusseldorf நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துணைத்தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 24- 02-09
நேரம்: பிற்பகல் 12.30 மணி


சுவீஸில் உள்ள ஐ நா சபை அலுவலகத்தின் முன் பேரணி

நாள்: வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்:
நிகழ்வு ஆரம்பம் மதியம் 1 மணியிலிருந்து




இன அழிப்பை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளை விரைவாக செயற்படவைக்கவும், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்கள் தவறாமல் கலந்து கொள்வீர்.. குடும்பத்தார், நண்பர், உடன் பணிபுரிவோருக்கு இந்த நிகழ்வுகள் பற்றி தெரியப்படுத்துங்கள்.

மறவாமல் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.