வெள்ளி, 22 ஜனவரி, 2010

அவதார்

படம் வெளியான சமயத்தில் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்ததால் இன்று தான் காணும் வாய்ப்பு கிட்டியது. அதற்காக இல்லையென்றால் உடனே பார்த்திருப்பேன் என அளந்துவிட விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமது பதிவர்கள் பலரின் விமர்சனங்களை படித்ததிலிருந்து படத்தை கணினியிலோ அல்லது தொல்லைக்காட்சியிலோ காணக் கூடாது என தீர்மானமாக முடிவெடுத்திருந்ததால், பிரான்ஸ் வாழ்க்கையில் முதன் முதலில் திரையரங்கில் காணும் முதல் (அதுவும் முதல் 3D) படம் அவதார் !!!

ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை மாறாத பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் இப்படி ஏதாவது ஒரு படம் பார்த்திருக்கின்றேனா என யோசிக்கக் கூடத் தேவையில்லை, இனி எக்காலத்திலும் சொல்லலாம் அப்படிப்பட்ட படம் அவதார் என. தொழில்நுட்ப பயன்பாடுகளின் உச்சம் !!

படத்திற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்திலும், படத்தின் ஒவ்வொரு காட்சியின் உழைப்பிலும் இயக்குனரின் தனித்துவம் தெரிகின்றது. வேற்றுகிரகவாசிகள் என்றாலே மனிதன் என்னும் அப்பாவியை தாக்க வருவதாக காட்டாமல் ஆரம்பிப்பதில் தொடங்கும் இயக்குனரின் அதகளம் இறுதிக் காட்சிவரை அனைவரையும் இருக்கையில் கட்டி வைக்கின்றது. மரங்கள், பறவைகள், இலைகள், குடியிறுப்புகள் என படக் குழுவினரின் சிந்தனையும், உழைப்பும் உண்மையிலேயே வேறு ஏதாவது கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என யோசிக்க வைத்தது.

பறவைகளையும், தாவரங்களையும் பரிவுடன் தொடுவதும், உணவுக்காகவோ அல்லது தற்காப்புக்காகவோ விலங்குகளை தாக்க நேர்ந்தால் கூட அதற்காக மனம் வருந்துவதிலாகட்டும் James Cameron னின் படைப்புக்கள் அற்புதமானவை.


நாவிக்களின் இடங்களை ஆக்கிரமிக்க துவங்கும் பொழுதினில் அவர்களின் குடியிருப்புகளின் மேல் குண்டுகளை வீசி அழிக்கும் காட்சியில் மனம் ஏனோ அமெரிக்கா, இலங்கை, இந்தியா என வரிசையாக உச்சரிக்கத் தவரவில்லை. உச்சகட்ட சண்டையில், நாவிக்களும் விலங்குகளும் இணைந்து தாக்குதல் ஆயுதங்களையும் இராணுவத்தினரையும் சிதறடிக்கும் காட்சியில் மனம் ஒரு குழந்தையைப் போல் குதுகாலித்துக் கொண்டிருந்தது.( நிஜ உலகில் சாத்தியமற்றுப் போனதை கனவுலகில் தேடும் முயற்சி ???) அமெரிக்கா, இலங்கை, இந்தியா என பிரித்துக் கொண்டிருக்காமல் kick out the humans என வாய்விட்டுக் கத்தினேன்.

படத்தைப் பார்த்தால் (ஆக்கிரமிப்பு) இராணுவங்களின் மேல் கொண்டுள்ள பார்வை மட்டுமல்ல, மனித இனம் இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் உண்மை கூட சுடலாம் !!!

கனவுலகம் ??? :-)

ஆக, கனவுலகில் மறுபடியும் பயணிக்க விரும்பி வெளியே வந்தவுடன் அடுத்த வாரக் கடைசியிலும் பார்க்க முன்பதிவு செய்தாயிற்று !!! :)

வெள்ளி, 13 நவம்பர், 2009

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

மனதைப் பதறவைக்கும் மற்றும் ஓர் காணொளி இணைப்பு



http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...

திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



புதன், 9 செப்டம்பர், 2009

திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்

Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நாள்: 12/09/09

நேரம்: காலை 10.30 மணியிலிருந்து

இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளி (திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிர்ப்புரம்), வெங்கடநாரயண சாலை, தி. நகர், சென்னை 17




கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்கள் விபரம் பின்வருமாறு

Mr Rajesh Sundaram, Deputy Editor, Headlines Today, Delhi
Mr AS Paneerselvam, Sr. Journalist
Mr Devasahayam, I.A.S (Retd)
Ms Kavitha Muralidharan, The Week
Mr Venkatramanan, Sr Journalist, Times of India
Mr Peer Mohammed, Deccan Chronicle


தொடர்புக்கு: savetamil@gmail.com, save-tamils@googlegroups.com,
98400 90898, 98844 68039

பின்குறிப்பு: இந்த நிகழ்வினை உங்களது நண்பர்களுக்கு அனுப்பியும், இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.



என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.