ஞாயிறு, 1 மார்ச், 2009

அடுத்த ஆஸ்கர் பரிசு ???



Slumdog Millionaire படத்தைப் பற்றியும் அதற்கான ஆஸ்கார் விருதுகளையும் பாராட்டி சீராட்டி, திட்டி, உள்குத்து, வெளிக்குத்து வைத்து ஏராளமான பதிவுகள் வந்துவிட்டதால் அதனைப் பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை.

படத்தின் கதைக் களமும் (சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பற்றி) அதற்கான திரைக் கதை அமைப்பும் அருமை. பின்னனி இசையைப் பற்றி என்ன சொல்ல?? அது தான் உலகமே கொண்டாடுகிறதே.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... !!!!!!!!!!      :)



இங்கு எழுத வந்தது படக் கதை, கதைக் களம், இயக்குனர் யார், அவரின் பின்புலமென்ன, ரகுமானின் திறமை பற்றியல்ல.. சில நாட்களுக்கு முன்னால் கீழ்கண்ட செய்தியைப் பார்த்தவுடன் தான், இந்த முறை ஆஸ்காருக்கு யார் காரணம் என்னும் அதிபயங்கர உண்மை புலப்பட்டது. அதே சமயம் அடுத்து வருங்காலங்களிலும் ஏராளமான ஆஸ்கார் பரிசுகள் தொடர்ந்து இந்தியாவிற்கு கிடைக்கும் சாத்தியங்களும் தெரிகின்றது.

"
ரஹ்மானுக்கு ஆஸ்கர்: உரிமை கொண்டாடும் காங்!"

இந்த உண்மை புரியாமல் ரகுமானையும் மற்றவர்களையும் கொண்டாடும் அரை வேக்காட்டுத்தனத்தை சு'தந்திர' இந்தியாவின் அரசபரம்பரையினர் தயைகூர்ந்து மன்னிப்பார்களாக.... வெள்ளைக்காரனிடமிருந்து 61 1/2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்ற இந்தியா என்னும் அமைப்பை 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸை தவிர இது போன்ற கதைக் களத்திற்கும் அதனால் வந்த விருதுகளுக்கும் யார் உரிமை கொண்டாட முடியும்? அதுவும் இந்தியாவின் வியாபரத் தலைநகரமான மும்பைச் சேரியில் இதுபோன்று மலக் குழிகளை விட்டுவைக்காமலும், மலத்தில் விழுந்து எழுந்தாலும் சினிமா நடிகர்களை பார்த்தால் மோட்சம் வரும் என என்னும் அளவிற்கு சமுதாய/கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தமலும் இருந்து இருந்தால், ஒரு வெள்ளைக்கார பயலால் இப்படி முகத்தில் அறையும் அளவிற்கு நிதர்சனத்துடன் ஒரு படம் இயக்கி இருக்க முடியுமா?

மும்பை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கவது தாங்கள் விளிம்பு நிலையில் உள்ளோம் என்றாவது விளங்கும். ஏனெனில் ஒப்பிட்டு பார்க்கவாவது வேறு நிலையில் மனித வாழ்க்கை உள்ளது. இன்னமும் அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத வடகிழக்கு மாநிலங்களிலும், அங்கு இவர்களின் இராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும், இராணுவ அடக்குமுறையின் கீழேயே 60 ஆண்டுகளையும் கழித்த காஸ்மீரிலும், இவர்களின் போலி தேசியவியாதிக் கொள்கையினால் நாயின் கீழாக சுட்டுக் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களிலிருந்தும் இன்னமும் எத்தனை லட்சம் Slumdog Millionaire போன்ற கதைகளை உருவாக்குவது? அது எவ்வளவு நிதர்சனசமாக இருக்கும்???

இந்த ஆஸ்காரினாலும் படக் கதையின் களத்தினாலும் உந்தப்பட்ட வேறு யாரேனும் ஒரு வெள்ளைக்காரர் மேற் சொன்ன ஒன்றின் ஏதேனும் ஒரு கதையை முயற்சித்தால் அதற்கு ஆஸ்கார் விருது வராதா?? இது போன்ற லட்சக் கணக்கான கதைக் களங்களை இவர்களை தவிர வேறு யாரால் இயல்பாய் உருவாக்க முடிந்திருக்கும்?

ஆகையால், இந்த ஆஸ்கார்கள் மட்டுமல்ல, இனிவருங்காலங்களில் வரும் ஆஸ்கார், பென்ஸ்கார் மற்றும் பியட்கார் விருதுகளுக்கும் காங்கிரஸ் என்னும் தேசிய வியாதி மட்டுமே உரிமை கொண்டாட தகுதியுள்ளது. குஜராத் கதைய எடுக்குறதுனா மட்டும் மனித வெட்டி கூட்டங்க கிட்ட சொல்லிடுங்க, இல்லைனா குரங்கு சேனைங்க உண்டு இல்லைனு பண்ணிடும்...

அதே சமயம், இனி மேல் மூலக்கதைக்காக தரப்படும் விருதை காங்கிரஸ் கட்சிக்கே (மனித வெட்டி கதைகளுக்கு காவி குரங்கு சேனைங்களுக்கு) வழங்க வேண்டுமென கோரிக்கைவைக்கும் தீர்மானத்தை இனமான தமிழக காங்கிரஸின் ஏதோ ஒரு கோஸ்டி தலைவர் முன்மொழிந்துள்ளதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்...

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் - 2

வணக்கம்,

நண்பர்கள் சிலர் புதிதாக சில இணைப்புகள் கொடுத்ததினால் அதை ஏற்கனவே பதிவிட்டிருந்த இடுகையில் இணைத்தேன்.

ஆனால், இதனை தொடரும் நண்பர்களுக்கு புதிய இணைப்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என எண்னியதால் அந்த புதிய இணைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)
Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english
http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm

Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications
இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

(Deadline March 27)

AtoSiM Master of Science
http://www.erasmusmundus-atosim.cecam.org/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm
http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

பொதுவாக தேட மற்றும் ஒரு தளம் http://www.scholarshipnet.info/

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

இவை அனைத்தும் ஏற்கனவே, பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள்
என்னும் தலைப்பில் இடப்பட்டிருந்த இடுகையில் பகுதிவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழனின் உணர்ச்சிவசப்படலும்....

புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் - செய்தி

இது போன்ற தாக்குதல்களினால் வரும் உற்சாகத்தில் அங்கு அவலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலமையை மறந்துவிடக் கூடாது.. அதனால் தான் புலிகளே கடந்த 2 மாத காலமாக தங்களது கள நிலைமையை அடக்கி வாசித்தனர்....


இந்த 2009ம் ஆண்டு துவக்கத்திலிருந்து மட்டும் சிங்களம் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை எத்தனை?? அதற்காக துவக்கப்பட்ட இழைகள் எத்தனை? இங்கு பாருங்கள் அரை மணி நேரத்தில் எத்தனை இடுகைகள்??????? !!!!



தமிழா..... உணர்ச்சிவசப்பட உன்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை !!!!

திங்கள், 16 பிப்ரவரி, 2009

இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி நிகழ்வுகள்

நண்பர்களே,

வரும் நாட்களில் இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி/கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பேரணி

நாள்:
வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்: காலை 10.30 முதல் மாலை 4 வரை.

மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை காண்க.


நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க், குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாக இங்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் http://www.pearlaction.org/ மற்றும்https://www.tamilsagainstgenocide.org/ என்னும் தளத்திற்கு செல்வதன் மூலம், நீங்கள் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் இனப்படுகொலைக்கான உதவியினை கண்டித்தும் அதை நிறுத்த வேண்டியும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: (18-02-09) புதன் கிழமை
நேரம்: காலை 10 லிருந்து மதியம் 2 வரை.

இடம்: High Commission of India

India House
Aldwych

London

http://hcilondon.in/contactus.php


ஜெர்மனியில்
கவனயீர்ப்பு நிகழ்வு

ஜெர்மனியின்
Dusseldorf நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துணைத்தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 24- 02-09
நேரம்: பிற்பகல் 12.30 மணி


சுவீஸில் உள்ள ஐ நா சபை அலுவலகத்தின் முன் பேரணி

நாள்: வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்:
நிகழ்வு ஆரம்பம் மதியம் 1 மணியிலிருந்து




இன அழிப்பை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளை விரைவாக செயற்படவைக்கவும், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்கள் தவறாமல் கலந்து கொள்வீர்.. குடும்பத்தார், நண்பர், உடன் பணிபுரிவோருக்கு இந்த நிகழ்வுகள் பற்றி தெரியப்படுத்துங்கள்.

மறவாமல் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2009

முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - விகடன்

ஆனந்த விகடன், தனது 18-02-09 வெளியீட்டில் கீழ்கண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னமே, சில பதிவர்கள் தங்களுடைய வலைத்தளத்தில் இதை வெளியிட்டிருப்பினும், இக்கடிதத்தின் நோக்கம்/முக்கியத்துவம் கருதி அது இங்கும் வெளியிடப்படுகிறது.
************************************************************************************
முத்துக்குமார்... ..கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா!

தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம்.

உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன். ஏனெனில், இங்கே அது மட்டுமே உண்மை!

நீ பேசாமல்கிடந்த அந்த மூன்று நாட்கள், இதுவரை பேசிப் பேசி எம்மை ஏமாற்றிப் பிழைத்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தினங்கள். 'காதலர் தினத்தில்' காதலிக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடிய வயதுதான் உனக்கும். ஆனால், நீ எழுதிய கடைசிக் கடிதம், பிரிவின் பெருவலியில் துடிக்கும் பிரபஞ்சக் காதலின் குரல். பார்க்கச் சகியாத அவலத்தை அடித்து நொறுக்கும் அன்பின் விரல். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தாய்.'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்ற குரலின் நீட்சியாய், 'உலகத் தமிழ் இளைஞர்களே ஒன்றுபடுங்கள்' என அறைகூவிவிட்டுச் செத்துப்போன நண்பனே... தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, சுகம், சுயநலம், வக்கிரம், கூத்து என ஒரு தலைமுறை உருவாகிறதோ என்ற சந்தேகத்துக்கெல்லாம் சாட்டையடியானது, உன் கடிதத்துக்குப் பிறகான நிகழ்வுகள்.

இளைஞர்களும் மாணவர்களும்தான் உன் மரணத்துக்கு மரியாதை தரத் திரண்டார்கள். இனப் படுகொலைக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். எங்கெங்கோ பெயர் தெரியாமல் உண்ணாவிரதம் இருந்து சுருண்டார்கள். கல்லூரி வளாகங்களில், பேருந்து-ரயில் நிலையங்களில், தெருக்களில், சந்திப்புகளில் நீ சொன்ன செய்திகளையும், இன அழிப்பின் பயங்கரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒட்டுமொத்தமாக அவர்கள் உன் முன் வைக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா?

'எங்களை வழிநடத்த யார் இருக்கிறார்கள்? நடக்கும் அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் எங்கள் குரல்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கும் உண்மையான தலைவன் எங்கே?' இங்கே யாருமில்லை நண்பனே... உண்மையில் யாருமே இல்லை!

'எனது உடலைத் துருப்புச்சீட்டாக்கி, ஈழ மக்களுக்கான போராட்டத்தைத் தொடருங்கள்' என்பதுதான் உனது தியாகத்தின் முதல் செய்தி. தொழிலாளர் புரட்சி வென்றதன் சாட்சியாக லெனினின் உடலைப் பல வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ரஷ்யா. 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் உடலை ஈழம் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின்பு, கிளர்ந்தது புது எழுச்சி.

உனது உடலை மூன்று நாட்கள் பாதுகாத்து வைத்ததே இளைஞர்களின், மாணவர்களின் கோபாவேசம்தான். உன்னையும் உண்மையையும் உடனே புதைக்கத்தானே விரும்பும் அரசியலும் அதிகாரமும்.

உனது சொந்த ஊர் தூத்துக்குடி வரை ஊர்வலத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற யோசனையைக்கூட செயல்படுத்த முடியவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்' என உளவுத் துறை அரசுக்கு ஓலை அனுப்பியதாம். ஒரு பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கெடாத 'சட்டம் - ஒழுங்கா' கெட்டுவிடப்போகிறது?

உனது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு, வட சென்னைக் குடிசைவாசிகள் ஏற்றிய தீபங்களை 'அணையாத தீபமாக்க' வேண்டியது யார் பொறுப்பு?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான போராட்டங்களில் நிற்கும் இன உணர்வாளர்கள் நீங்கலாக தா.பாண்டியன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோருக்கு உன் சார்பாக நன்றி. பசி, பட்டினி, ஊனம், சாவு எனத் தினம் தினம் நம் மக்கள் அழிந்து மடியும் அவலத்தை, உண்மை நிலவரத்தை மக்கள் சபைக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிலரில் இவர்களும் உண்டு. ஆனால், அரசு அதிகாரத்துக்குச் செவிசாய்ப்பதும், தேர்தல் அரசியலுக்கான 'கூட்டு அரசியல்' யோசனைகளில் தடுமாறிப் பின்வாங்குவதும் இவர்களின் பலவீனம் என்பதையும் நீ அறிவாய்.

பதவிக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் கிஞ்சித்தும் சாய்ந்திடாமல், நம் மக்களுக்காக எவரேனும் முழுதாக முன்வரும் காலம் எப்போது வருமோ... அன்றுதான் உனது உன்னத நோக்கங்களை நிறைவேற்றும் தகுதியும் உண்மையும் உரியவர்களுக்கு வரும்.

முதல்வரைப் பற்றி நீயே கடிதத்தில் 'தெளிவாக' எழுதியிருக்கிறாய். உனது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றிருக்க வேண்டியது 'கல்லக்குடி போராளி'தானே. மனிதச் சங்கிலி, தீர்மானம், ராஜினாமா விளையாட்டு... என 'ஆறப் போட்டு, ஊறப் போட்டு' மறக்கடிக்கிற அரசியல் யுக்தியை இதிலுமா செயல்படுத்துவது? அவரது 'நிலை' நமக்குப் புரிகிறது முத்துக்குமார்.

'முதல்வரே... பகிரங்கமாகச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்று சொல்லுங்கள். நல்லது, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.' - இதைத்தானே நீ சொல்ல வந்தாய்?

சினிமா ஆடியோ ரிலீஸ் விழாக்களில் எல்லாம் கூடிச் சிரிக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட வரவில்லையே நண்பா!

'ஈழத் தமிழர்களின் நிலையை முன்னிட்டு இந்த வருடம் என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்' என அழகிரி சொன்னதுதான் 2009-ன் மெகா மெகா ஜோக். கலைஞர் டி.வி-யில் ஒரு காமெடி சேனல் ஆரம்பித்து, அதற்கு அழகிரியைப் பொறுப்பாளராகப் போடலாம்.

விஜயகாந்த் யாரென்றும் நீ சொல்லிவிட்டாய், நண்பனே... தமிழர்களுக்கான தைரியமும் தனிக் குரலும்தானே அவரது அடையாளமென நம்பினோம்!

மகனுக்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்திருக்கிறாரே என வியந்தோம். ஆனால், உனது அறைகூவலுக்கும் ஈழ மக்களின் துயர்துடைப்புக்கும் கூப்பிட்டால், 'ஷூட்டிங் காம்'... 'கூட்டணி மீட்டிங்காம்'..! சார் ரொம்ப பிஸி. 'லிஸ்ட்ல நம்மளை விட்ருவாய்ங்களோ' என உஷாராகி, 'நாடாளுமன்றத் தேர்தல் புறக் கணிப்பு' என 'போகாத' ஊருக்கு வழிகாட்டி, அறிக்கை அட்டைக் கத்தி சுழற்றுகிறார் கேப்டன். ஈழ மழையில் வேஷம் கலைந்து தெரிவதுதான் அவரது நிஜ முகமோ?

ஜெயலலிதாவைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். 'உறுதியான நிலைப்பாடு' என்கிற பெயரால் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் அவருக்கு, ஈழத் தமிழர்களாவது... எழவாவது?

காங்கிரஸ்காரர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், 'கருமாதி வீட்டில் இட்லிக்கு அடித்துக்கொள்கிறார்கள்.' 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலைவிட்டு தமிழன் தன்னை ஒதுக்கியே வைத்திருக்கிற ஆத்திரம்கூட அவர்களுக்கு இருக்கலாம்.

அதற்காக, தமிழ் இனத்தையேவா ரத்தச் சேற்றில் மிதக்கவிட்டு வெறுப்பைத் தீர்த்துக்கொள்வது? பரவாயில்லை... இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இங்கே இவர்களை நுழையவிடாமல் இவர்களே செய்துகொள்வார்கள்!

'உங்களுக்குத் தமிழன் அழிய வேண்டுமென்றால், எங்கள் பழங்கதைகளில் வருகிற மாதிரி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடுங்கள்' எனக் கதறினாய் நீ. ஆனால், நாம் அளித்த பதவிகளைக்கூட தூக்கி எறிய முடியாத தலைவர்களை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.

கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது எனக்கு.

'அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத
ராணுவம் நடத்திய

கொலைவெறித்
தாக்குதலில்

ஐம்பது
பேர் பலியானார்கள்

ஐந்நூறு
பேர் புலியானார்கள்!'


அது அங்கே... ஆனால், இங்கே?

இங்கேயும் மாற்றத்துக்கான ஒளித் தீற்றல்கள் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழகத் தமிழர்களுக்காகவும், உலகளாவிப் புதிய வியூகங்களில் போராட்டத்தையும், வன்முறைக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்கவும் நமது இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள் நண்பனே.

சுயலாபங்களுக்காகப் பிற உயிரை மதிக்காத ஒவ்வொருவரும் நமக்கு எதிரியே. உனது சிந்தையை, கனவை, கோபத்தை, குரலை, உண்மையை, மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களும் நல்ல இதயங்களும் உனது பெயரால் சேர்வார்கள்.

உன் குரலாகவே மாறி நம் மக்களுக்குச் சொல்கிறேன். இனி உண்ணாவிரதங்கள் வேண்டாம், தீக்குளிப்புகள் வேண்டாம். அதே நேரம், குமுறல்களைப் பூட்டி வைத்திருக்கவும் வேண்டாம் உங்கள் உள்ளத்துக்குள்ளேயே... வாருங்கள் வீதிக்கு, இணைந்து போராட!

-அநீதிகளுக்கெதிரான ஒரு சகோதரன்-