திங்கள், 31 ஆகஸ்ட், 2009

நாகலாந்து படுகொலைக் காட்சிகள்

வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப் பெற்றது.

42 பழங்குடி இனங்களையும், சற்றேறக்குறைய 35 இலட்சதிற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள தேசிய இனமான நாகாவின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காவும் Nationalist Socialist Council of Nagaland (NSCN) இயக்கம் 1960களிலிருந்து போராடி வருகின்றது. இந்திய மைய அரசுடன், (NSCN) இயக்கத்திற்கு கடந்த 1 ஆகஸ்ட், 1997 லிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்றது. இருந்த போதிலும், அதன் அரசியல், மனித உரிமைப் பிரிவு பொருப்பாளார்களை பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12ல், அசாம் ரைபிள் படைப்பிரிவினரால், பல பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட Salmon Hungyo என்னும் 28 வயதான வாலிபரின் உடலத்தின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

படங்கள் கோரமானவை



கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்




இந்த நிகழ்வைப் பற்றியோ, அல்லது மக்களின் போராட்டத்தைப் பற்றியோ ஏதேனும் செய்தி உண்டா என வெகுஜன ஊடகங்களில் கண்ணில் எண்ணை விட்டு தேடியும் ஒன்றையும் காணோம். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக பெரும்பான்மை ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து வருவதற்கு சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் வாசகர்களின் கள்ள மெளனம். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அரச பயங்கரவாதத்தின் படுகொலைகளை கண்டும் காணாமல் போகும் போக்கே உள்ளது.

வாழ்க ஜனநாயகம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்

நாடு முழுதும் அமைதியாகவும், செழுமையாகவும், மக்களாட்சியில் இந்தியா மிளிர்வதாகவும் எழுதிக் கொண்டிருக்கும் இந்தியப் பத்திரிக்கை/செய்தி ஊடகங்கள் பெரும்பான்மையினோருக்கு வட கிழக்கு மாநிலங்கள் ஒரு இருண்ட, வேண்டப்படாத பிரதேசமே. அவைகளை இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பாதக கருதிக் கொண்டிருப்பதைத் தவிர அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, இதற்கு முன்பு நிகழ்ந்தவை என வேறு சில பயங்கரவாத சம்பவங்களை பட்டியலிடுவதுடன் அவற்றின் கடமைகள் ஓய்ந்துவிடுகின்றன.

1958லிருந்து அங்கிருக்கும் AFSPA (Armed Forces Special Powers Act) பற்றியோ, தனது சொந்த நாட்டின் இராணுவ/பாதுகாப்பு படையினருக்கு எதிராக பெண்கள் கிழர்ந்தெழுந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியது பற்றியோ, அங்கு நாளும் நிகழும் மனித உரிமை மீறல்கள், மாநில உரிமைகள் நசுக்கப்படுவது பற்றியோ வாய் திறவாது இந்தப் பெரும்பாண்மை ஊடகங்கள். ஒவ்வொரு மாநில/தேசிய மக்களுக்கும் இந்தியா என்னும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை அவர்களின் தனித்துவத்திற்கு தரப்படும் மரியாதையிலும் மதிப்பிலும் விளையும் புரிந்துணர்வில் தான் வருமென்பதை இது போன்ற பெரும்பாண்மை ஊடகங்களைப் படிக்கும் பெருவாரியான வாசகர்களும் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களைப் போன்றவர்கள் தாம், எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள் என சொல்வதும் ஒரு முரண் நகையே. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்ட நெடும் காலமாய் வைத்திருக்கும் இந்த "அப்பாவி மக்களாட்சி நாடு", அகிம்சையால் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாய் எண்ணுபவர்கள் அவர்கள்.

இந்நிலையில், மிகச் சமீபத்தில் வடகிழக்கில் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) ஜீலை 23ல் இம்பாலில் பொதுமக்களின் கண்முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு இளைஞரைப் பற்றிய Tehelka புலனாய்வுப் பத்திரிகையின் செய்தி

2) அசாமில்,
Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் காணொளி.

http://www.youtube.com/watch?v=hTArs6ljqgk

இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் நடப்பதை பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்க (ஒரு வகையான கண்கட்டுவித்தை), ஆனால், அதில் மட்டுமே நாட்டு நடப்புகளை கவனிப்போர் இது பற்றிய விவாதங்களையே தவிர்க்கின்றனர். இன்னமும் சிலர், ஒரு படி மேலே போய் இது போன்ற இராணுவ அத்துமீறல்களை ஆதரிக்கவும் செய்கின்றனர். இதே போன்ற ஒரு இழிசெயல் இவர்களுக்கோ அல்லது இவர்களது குடும்பாத்தாருக்கோ/நண்பர்களுக்கோ நிகழ்ந்தால் கூட அவர்கள் அதே போல் விவாதம் புரிவார்களா எனத் தெரியவில்லை. இவர்களின் போலித் தேசியவாதம் கண்ணை மறைக்கின்றது. இந்திய 'இரை'யாண்மையைப் பேசுவோர் இந்த மக்களின் இறையாண்மையைப் பற்றியோ, இவர்களின் அரசியல் தனித்தன்மையைப் பற்றியோ பேச மறுப்பது உண்மையிலேயே அயோக்கியத்தனமானது.

மக்களாட்சி நடப்பதாக கூறிக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாய நாட்டில், பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே நடக்கும் காலவரையற்ற இந்த இராணுவ ஆட்சியின் விளைவுகளே நாள்தோறும் நிகழும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள்.

அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுதல், காலச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் திட்டமிட்ட முறையில் சீரழித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்ம்படுத்த முயலாமல் இராணுவ/போலிஸ் அடக்கு முறையின் மூலமே தீர்வை எட்ட முடியும் என எண்ணும் இந்திய மைய அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கில் மாற்றம் நிகழாத வரை, நிகழ்த்தப்படாத வரை, அங்குள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்க இயலாது.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.tehelka.com/story_main42.asp?filename=Ne080809murder_in.asp

http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html

http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html


பின்குறிப்பு: தங்கமணியின் பதிவினைப் படித்து பின் சில விசயங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த மனநிலையில் எழுதியதால் பதிவிலும், தலைப்பிலும் அதன் தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை !!!!

சனி, 18 ஜூலை, 2009

மாற்றுத் திறன் உடைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - Scholarship for Students with Disabilities

இது, இன்று மின்னஞ்சலில் வந்தது. தேவையும் அவசியமும் கருதி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...

இந்திய மைய அரசாங்கம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் பட்டப் படிப்புகளுக்கான 500 கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள்

Financial Assistance can be given for computer with editing software for blind/deaf graduate and post graduate students pursuing professional courses and for support access software for cerebral palsied students.

Scholarship of Rs.1000/-p.m. for hostellers and Rs.700/- p.m. for day scholars studying in professional courses at graduation and above level, and Rs.700/- p.m. for hostellers and Rs.400/- p.m. for day scholars pursuing Diploma /certificate level professional. Course fee is reimbursed upto ceiling of Rs.10,000/- per year.

இதன் முழுத் தகவல்களைப் பெற இங்கே அழுத்தவும்.

விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 31க்குள் அனுப்பியிருக்க வேண்டும்.

இவர்களின் வலைப்பக்கம் www.socialjustice. nic.in

நண்பர்கள் மற்றும் தேவையுள்ள மாணவர்களுக்கு இத்தகவல்களை கொண்டு சேருங்கள்...

சில மாணவர்களுக்கு கல்வி உதவி வேண்டி.

நண்பர்களுக்கு வணக்கம்,

கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும், பள்ளித் தேர்வுகளை முடித்து கல்லூரி செல்வதற்காக காத்திருக்கும் பலரில், சில ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்குடன் நண்பர்கள் சிலர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கும் முயற்சியைப் பற்றிய பதிவு இது.

ஒர்குட் போன்ற பொதுத் தளங்களை வீண் அரட்டைக்கும், வெட்டி மொக்கைக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், தமிழக/இந்திய அரசியல் போக்குகளைப் பற்றி விவாதிக்கவும் (அப்ப, இது மட்டும் என்ன உபயோகமான வேலையானு கேக்க கூடாது !!!!), முடிந்த அளவு மிகச் சிறிய அளவிலேனும் சமுதாயத்திற்கு பயனுள்ள காரியங்களில் பங்கேற்று செயல்படவும் பல குழுமங்கள் ஒர்குட் தளத்தில் உள்ளது. அவற்றுள், தமிழக அரசியல் குழுமம் - Tamilnadu Politics (TNP) முக்கியமான ஒன்று.

இந்த முறை, கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்) இருப்பது தெரியவந்தது, (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர், படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.,) அவர்களில் ஏதேனும் இருவருக்கு உதவலாம் என முடிவெடுத்துள்ளோம்.

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இது தொடர்பாக, எனக்கு வந்த மின்னஞ்சலை பலருக்கு அனுப்பி உதவவி வேண்டியதில், மிகச் சிலரே இந்த முறை உதவு முடியும் என உறுதியளித்துள்ளனர். நண்பர் இரஞ்சித் தனது வலைப்பதிவிலும் இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த தமிழக அரசியல் குழுமத்தின் - Tamilnadu Politics (TNP) முன்னைய செயற்பாடுகள், உங்கள் பார்வைக்கு

சென்ற ஆண்டின் துவக்கத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள மலையடிவார கிராமம் பொம்மிக்குப்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அந்த கிராம மக்களின் சார்பாக Rs. - 48,384/ னை ஒர்குட் குழும நண்பர்களிடமிருந்து (20 பேர்) வசூழித்து நன்கொடையாக கட்டினோம். கட்டிய தொகை ரூ 32,800. மீதம் கையிறுப்பு ரூ.15,584.அது பற்றிய விவரங்களைக் காண

பொம்மிகுப்பம் பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து இந்த கல்வியாண்டு முதல் கொடுக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகியது.

தமிழ்நாடு அரசியல் குழுமம் என பெயரிட்டுவிட்டு, அரசியல் இல்லாமலா.. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் கைதானவர்களை வெளியில் எடுக்க, சிதம்பரத்திற்கு எதிரான தேர்தல் பிரச்சார செலவுகளுக்கும் இந்த குழுமத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டது (12 பேரிடமிருந்து 65 ஆயிரம் ரூபாய்).!!!!!

அதில் மீதமான தொகை, 1 ஆயிரம் ரூபாயினை சென்ற மாதம் ஜூன் 7ல் நடைபெற்ற "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட பண விபரங்களைக் கூறுவதன் காரணம், இந்த தன்னார்வ செயலுக்கு எந்தப் பெயரும் சூட்டவில்லையெனினும் (அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் NGO வாக பதிவு செய்யும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன) முன்னரே அனுபவம் உள்ளது என சுட்டிக்காட்டத் தான். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

SWIFT CODE: ICICINBB
Bank code: 6204

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில், பள்ளியிறுதிப் படிப்பு முடிந்த நிலையில், கல்லூரி சென்று படிக்க இன்னமும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிய விரும்பினால், ஜாம்பவன் நேரு (9941185563) என்னும் பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி....

பின்குறிப்பு: இணைப்புகள் முழுவதும் ஒர்குட் இணைப்புகளே. உங்களது ஜிமெயில் வழியாக மிக எளிதாக உள்நுலையலாம்.

வியாழன், 25 ஜூன், 2009

ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09

ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.

நாள்: 28/06/09

நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை



கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு

விடுதலை ராசேந்திரன் - ஈழப் போரட்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும்
தந்தை ஜெகத் கஸ்பர் - வதைமுகாம்களில் அடைபட்டுள்ள மக்களின் இன்றைய அவலநிலை
பூங்குழலி - சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்
அருள் ஜார்ஜ்(PUCL) - சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள்

இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக சில குறும்படங்களை ஒளிபரப்பவும், புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்து முகாம்களிலிருக்கும் சில ஈழத்தமிழர்களும், சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: பல்வேறு பணிச்சூழல், தனிப்பட்ட வேலைகளின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களினால் சென்றமுறையைப் போல் முன்கூட்டியே இந்த நிகழ்வை பலருக்கும் தெரியப்படுத்த இயலவில்லை என அறிய நேர்ந்தது. ஆகையால், சென்ற முறை நீதிக்காண அமைதிப் பேரணி நிகழ்விற்கு பரப்புரை செய்ததைப் போல், இந்த முறையும் இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.